துபாயில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்றின் 2 ஆவது லீக் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஏற்கெனவே தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா மீண்டும் ஒருமுறை பெரும் சருக்கலை சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தத் தோல்வி குறித்து பல முன்னாள் வீரர்கள் பலர் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதனை இப்போது பார்க்கலாம்.
இந்திய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் "இந்தத் தோல்வியின் காரணமாக விராட் கோலியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்தத் தோல்விக்கு அவர் மட்டுமே காரணமல்ல. இது ஒட்டுமொத்த அணியினரின் தோல்வி, இதற்கு பயிற்சியாளர்களும் காரணம். இந்திய ரசிகர்களுக்கு இன்றைய இரவு ஒட்டுமொத்தமாக பயமுறுத்தக் கூடியதாக இருந்தது" என்றார்.
முன்னாள் வீரர் மதன் லால் "இந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டியை ஒருவித பதற்றத்துடனையே எதிர்கொண்டனர். அது ஏன் என தெரியவில்லை. டி20 போட்டியை பொறுத்தவரை நீங்கள் ரன்களை சரியான நேரத்தில் குவிக்கவில்லை என்றால் உங்களால் போட்டிக்குள்ளேயே வர முடியாது. 111 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு வெற்றிப்பெற முடியுமென்றால் அதற்கு ஏதாவது ஒரு அதிசயம்தான் நடக்க வேண்டும். கடந்த இரண்டு போட்டிகளிலும் சந்தித்த அணிகள் இந்தியாவை துவம்சம் செய்து விட்டனர். பல ஆண்டுகளாக தொடக்க வீரராக களமிறங்கும் ரோகித் சர்மாவை ஏன் 3ஆவது இடத்தில் இறக்க வேண்டும்?" என்றார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் "இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் ஏன் மாற்றியமைக்கப்பட்டது என புரியவில்லை. ஒருவேளை தோல்வி பயத்தின் காரணமாக இதை செய்தார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் பேட்டிங் ஆர்டரை மாற்றியமைக்கப்பட்ட இன்றைய முடிவு இந்தியாவுக்கு தோல்வியையே பரிசாக கொடுத்துள்ளது. ரோகித் சர்மா எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன், அவரை 3ஆம் இடத்தில் களமிறக்குகிறார்கள். இளம் வீரர் இஷான் கிஷன் மீது ஒட்டுமொத்த சுமையை கொடுத்து முதலில் களமிறக்குகிறார்கள். ட்ரெண்ட் போல்ட் இடக்கை வேகப்பந்து வீச்சை ரோகித் சர்மாவால் எதிர்கொள்ள முடியாது என்பதாலா? இந்த மாற்றம் மேற்கொண்டதற்கு இஷான் கிஷன் 70 ரன்கள் அடித்திருந்தால் பாராட்டி இருக்கலாம். ஆனால் அதான் நடக்கவில்லையே" என்றார் காட்டமாக.
கெளதம் காம்பீர் கூறுகையில் "இந்தியாவிடம் திறமை இருக்கிறது. ஆனால் இதுபோன்ற பெரிய போட்டித் தொடரை எதிர்கொள்வதற்கான மனோ பலம் இல்லை என்பதே என்னுடைய பார்வையாக இருக்கிறது. நேற்றையப் போட்டி ஒரு காலிறுதி ஆட்டத்துக்கு சமமானது. ஆனால் நம் வீரர்களிடம் தேவையான மனவலிமை இருந்ததா என்பதே கேள்வி. இப்போதும் சொல்கிறேன் இந்தியா மிகவும் திறமை வாய்ந்தது. அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் பெரியப் போட்டிகளை எதிர்கொள்ளும் தேவையான மனவலிமை நம்மிடம் இல்லை என்பதே என் கருத்து" என்றார்.
முன்னாள் ஆல்-ரவுண்டர், இர்பான் பதான் "இதுபோன்ற பெரிய போட்டிகளில் ஒரு தோல்விக்கு பின்பு ஆடும் லெவனில் ஏன் இத்தகைய மாற்றங்கள். ஒருதோல்விதான் வீரருக்கு அணியில் தேவையான ஸ்திரத்தன்மை வேண்டும். இப்போது இருக்கும் அணியில் என்ன நடக்கிறது. என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதே புரியவில்லை. அதுவும் மிகப்பெரிய முடிவுகள் சாதாரணமாக எடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments