சிலருக்கு தன் எதிர் பாலினத்தினரின் மீது காதல். சிலருக்கு படிப்பின் மீது காதல். சிலருக்கு வேலையின் மீது காதல். சிலருக்கு விளையாட்டின் மீது காதல். இப்படியாக ஒவ்வொருவருக்குமான காதல் மாறிக் கொண்டே இருக்கிறது. அப்படித்தான் அவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் மீது தீரா காதல்.
உலகிலேயே அதிகளவில் கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இருப்பினும் அதிலிருந்து தனித்து நிற்கிறார். இந்தியா விளையாடும் ஒவ்வொரு தொடருக்கும் அணியில் 15 வீரர்கள் இடம் பெறுகிறார்கள் என்றால் 16-வது நபராக களத்திற்கு வெளியே மைதானத்தின் ஸ்டாண்டுகளில் நின்றபடி இந்திய அணிக்கு உற்சாகம் கொடுப்பவர். இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் தனது உடல் முழுவதும் மூவர்ண கொடியின் வண்ணங்களை பூசி கொண்டு, ஒரு கையில் தேசியக் கொடியையும், மறு கையில் வெண்சங்கை முழங்கியபடியும் மாஸ் காட்டும் அவரை நேரலையில் கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் கவனித்திருப்போம்.
பொழுதுபோக்காக ஆரம்பித்த கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான அவரது பெயர் சுதிர் குமார் சவுத்ரி. பீகார் மாநிலம் முசாஃபர்பூருக்கு பக்கத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர். அவர் பிறந்து, வளர்ந்து, படித்தது அனைத்தும் அங்குதான். பெரும்பாலான இந்தியர்களை போல அவருக்கும் கிரிக்கெட் விளையாட்டு என்றால் மிகவும் பிரியம். அதுவும் இந்திய அணியும், முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் விளையாடினால் கொள்ளை இஷ்டம். பொழுதுபோக்காக தனது கிராமத்தின் பஞ்சாயத்து போர்டு டிவி பெட்டியில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ஆரம்பித்துள்ளார். அதனை தன் இறுதி மூச்சிருக்கும் வரை தொடர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தனது 22-வது அகவை வரை கிரிக்கெட் போட்டியை டிவி பெட்டியில் மட்டுமே பார்த்து வந்த அவருக்கு 2002 வாக்கில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த அனுபவம் அவருக்கு ரொம்பவே புது விதமாக இருந்தது.
“அந்த போட்டியில் சச்சின் அடித்த ஒவ்வொரு ஷாட்டுக்கும் பந்து என்னை நோக்கி பாய்ந்து வருவதை போலவே இருந்தது” என அவரே தெரிவித்துள்ளார். சச்சினின் கோடான கோடி ரசிகர்களில் அவரும் ஒருவர். அதுநாள் வரையில் டிவியில் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வந்த அவருக்கு போட்டியை நேரில் பார்த்த காரணத்தால் அந்த அனுபவம் அமைந்துள்ளது. “சச்சினை முதல் முறையாக நேரில் பார்த்தது என் பிறவி பயனை அனுபவித்த மாதிரியான உணர்வு வந்தது” எனவும் தெரிவித்துள்ளார் சுதிர்.
அந்த போட்டியில் இருந்து இந்திய அணி ஆடி வரும் ஒவ்வொரு போட்டியிலும் பார்வையாளராக தனது டிரேட்மார்க் அடையாளத்துடன் தவறாமல் கலந்து கொண்டு, இந்திய வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்து வருகிறார்.
“பெரும்பாலும் வட இந்தியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து செல்வேன். கையில் காசு இல்லாத காரணத்தினாலும், செலவை குறைக்கவும் இந்த ஏற்பாடு. ரயில் பயணங்களில் கிரிக்கெட் பார்க்க செல்லும் போது டிக்கெட் எதுவும் எடுக்காமலே வித்-அவுட்டில் பயணம் செய்த அனுபவங்களும் எனக்கு உண்டு. அந்தளவிற்கு கிரிக்கெட் என்றால் எனக்கு உயிர்" என்கிறார் சுதிர்.
இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் மிஸ் செய்யாமல் பார்ப்பது அவரது வழக்கம். இருந்தாலும் வெளிநாடுகளில் இந்தியா விளையாடுகின்ற போட்டிகளையும் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு வந்துள்ளது. அதனால் தனது கிராமத்தில் இயங்கி வரும் பால் பண்ணை ஒன்றில் இரவு பகலாக வேலை பார்த்து, அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு பாஸ்போர்ட் எடுத்துள்ளார்.
சுதிர் மீது பட்ட சச்சினின் பார்வை!
“2008 என நியாபகம். சச்சினின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர் பார்வை என் மீது பட்டதால் அவரது மனம் கவர்ந்த ரசிகனானேன். அவரோடு உணவும் சாப்பிட்டுள்ளேன். அதோடு இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் தவறாமல் நான் பார்க்கும் வகையில் ஒவ்வொரு போட்டிக்குமான டிக்கெட்டுகளை எனக்கு ஸ்பான்சர் செய்ததும் சச்சின்தான். அதே போல வெளிநாடுகளில் இந்திய அணி விளையாடுவதை நான் பார்ப்பதற்காக எனக்கான விசா செலவுகளையும் அவரே பார்த்து கொண்டார். அதன் மூலம் வெளிநாடுகளில் இந்தியா விளையாடும் போட்டிகளை கடந்த 2010-இலிருந்து பார்த்து வருகிறேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மாதிரியான நாடுகளில் நடந்த போட்டிகளை நேரடியாக பார்த்து, இந்திய அணிக்கு எனது ஸ்டைலில் உத்வேகம் கொடுத்துள்ளேன். ஆசிய நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டிகளையும் பலநூறு கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்தே நான் பார்த்துள்ளேன்.
2011-இல் இந்திய அணி எப்படியும் உலக கோப்பையை வெல்லும் என்ற பெருங்கனவோடு நம்பிக்கையும் இருந்தது. அந்த நம்பிக்கை கைகூடியதோடு உலக கோப்பையை எனது கையில் கொடுத்து அழகு பார்த்தார் சச்சின். அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. அவரது ஓய்விற்கு பிறகு 'மிஸ் யூ சச்சின்' என எழுதியபடி இந்தியா பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியையும் பார்த்து வருகிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பேன்" என இந்திய கிரிக்கெட் அணி மீதான தனது பற்று குறித்து விவரிக்கிறார் அவர்.
எந்தவித வேலைக்கும் செல்லாமல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்ப்பதை மட்டுமே முழு நேர வேலையாக கொண்டுள்ள சுதிர் குமார் சவுத்ரி தனக்கு கல்யாண வாழ்க்கை சரிபட்டு வராது என்ற காரணத்தினாலும், அந்த பந்தம் தன் ஆர்வத்திற்கு தடைக்கல்லாக அமையலாம் என்பதாலும் 40 வயது நிரம்பிய நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் கிரிக்கெட் மீது தீராக் காதலுடன் வாழ்ந்து வருகிறார்.
முந்தைய அத்தியாயம்: 'கிரிக்'கெத்து 15: ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியின் வரலாறு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments