கொல்கத்தா அணி நிதிஷ் ராணாவை பயன்படுத்தும் விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கோபம் காட்டியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆரோன் பின்ச் 3, வெங்கடேஷ் அய்யர் 6, பாபா இந்திரஜித் 6, சுனில் நரைன் 0, ஆன்ட்ரே ரஸ்ஸல் 0 என வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். குல்தீப் யாதவ் சுழலில் அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
அணியை சரிவில் இருந்து மீட்க முயன்ற கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரும் நீண்ட நேரம் நிலைக்காமல் 42 ரன்களை எடுத்து அவுட் ஆனார். 83/6 ரன்கள் என கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்த சூழலில், நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதிஷ் ராணா 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். எனினும் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 146/9 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கை விரட்டிய டெல்லி அணி 19-வது ஓவரில் 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில் நிதிஷ் ராணாவை முன்கூட்டியே களமிறக்கியிருந்தால் அணியின் ஸ்கோர் நன்கு உயர்ந்திருக்கும், ஆனால் கொல்கத்தா அணி அதனை செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ''நிதிஷ் ராணா நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். ஆனால் அவர் 6-வது வீரராக அனுப்பப்பட்டார். அவருக்கு ஒரு ஃபினிஷர் ரோல் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால் நான் கேட்கிறேன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு ஃபினிஷராக இருக்கும்போது, நிதிஷ் ராணாவை ஏன் அதே வேலையை செய்ய விரும்புகிறீர்கள்?
ராணாவை 3-வது வீரராக இறக்க முடியாது. ஏனென்றால் அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார், எனவே ராணாவை 4-வது வீரராக களமிறங்க செய்வதுதான் சரி. அவரை பேட்டிங் ஆர்டரில் இருந்து தாமதமாக அனுப்பியதில் எந்த அர்த்தமும் இல்லை, அவரை முன்கூட்டியே களமிறக்கி நிறைய பந்துகள் ஆட வைக்க வேண்டும். ஆனால் இவ்வளவு தாமதமாக அவர் களத்திற்கு வந்தால் எப்படி அணியின் ஸ்கோர் உயரும்'' என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: குல்தீவ் யாதவ் சுழலில் சிக்கியது கொல்கத்தா - 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments