
மும்பை அணி வெற்றி பெற்றதால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது டெல்லி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ராவன் பவல் 43 ரன், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன், பிருத்வி ஷா 24 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி சார்பில் பும்ரா 3 விக்கெட், ரமன்தீப் சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பிரெவிஸ், இஷான் கிஷணுடன் ஜோடி சேர்ந்தார். பிரெவிஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் இஷான் கிஷண் வெளியேறினார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த திலக் வர்மா, டிம் டேவிட் ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. டிம் டேவிட் 11 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்தது. இதன் மூலம் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. டெல்லி தோல்வியடைந்ததால் 16 புள்ளிகள் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-வது இடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 4-வது அணியாக பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனை பெங்களூரு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளன.
இதையும் படிக்கலாம்: ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments