இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியை இந்தியா வென்ற சூழலில் இன்றையப் போட்டியில் வெற்றிப் பெற்றால் இந்தியா தொடரை வென்று விடும்.
இந்திய அணியை பொறுத்தவரை ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சய் சாம்சன், பிருத்வி ஷா ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார் கடந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல தீபக் சஹார், சுழற்பந்துவீச்சாளர் சஹால் ஆகியோர் தங்களுடைய முழு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மட்டும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முழுமையான பார்முக்கு திரும்பவில்லை. இந்தப் போட்டியில் பெரும்பாலும் இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்றே தெரிகிறது. ஒரு மாற்றத்துக்கு பிருத்வி ஷாவுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் குறைவு. இலங்கை அணியில் சாரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ தவிர அந்த அணியில் மற்றவர்களின் பேட்டிங் எடுபடவில்லை. ஏற்கெனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்துவிட்ட இலங்கை அணி 20 ஓவர் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். டாப்-3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் நிலைத்து ஆடினால் இந்தியாவை வெல்லலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments