"எவ்வளவு பெரிய பவுலர்கள் பந்து வீசினாலும் போட்டியின் போது நாங்கள் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுவோமே தவரி அவர்களின் வரலாறுகளை அல்ல" என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 1 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை தொடங்க இருக்கும் போட்டியில் வெற்றிப்பெற்று முன்னிலைப் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் "அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. அஸ்வின் உலக தரம் வாய்ந்த வீரர். எங்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்டில் அவரது திறமை என்ன என்பதை நாங்கள் அறிவோம். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். அஸ்வினால் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும்" என்றார்.
மேலும் பேசிய அவர் "ஆனால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகவே உள்ளோம். போட்டியின் போது யார் பந்து வீசினாலும் அவர்களின் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பது மட்டும் தான் எங்களது வேலை. அதை சரியாக செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. பந்தை மட்டுமே நாங்கள் பார்ப்போமே தவிர அவர்களின் வரலாறுகளை அல்ல. எனவே எங்கள் திட்டத்தை சரியாகவே பயன்படுத்துவோம்" என்றார் ஜோ ரூட்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments