Advertisement

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் நீடிப்பதற்கு தோனி காரணமா?

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவதற்கு தோனியின் பரிசீலனையே காரணம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற முதல் சூப்பர் 12 லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் தன்னுடைய 2 ஆவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடுகள் தொடர்ந்து கேள்விக்குறியாக இருக்கிறது.

image

ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தனக்கு ஏற்பட்ட அறுவைச் சிகிச்சைக்கு பின்பு பந்துவீசவில்லை. ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோதும் அவர் பந்துவீசவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதும் பந்துவீசவில்லை, பேட்டிங் மட்டுமே செய்தார். ஆனால் அதிலும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. இதனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் பவுலிங் செய்யக் கூடிய வீரரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

image

இந்நிலையில் இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் "ஐபிஎல் தொடரில் பந்துவீசாத காரணத்தால் ஹர்திக் பாண்ட்யாவை இந்திய டி20 அணியில் சேர்க்காமல் இருக்கவே தேர்வாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் தோனியின் பரிந்துரையின் பேரிலேயே அவருக்கு அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது. ஹர்திக் பாண்ட்யா சிறந்த பினிஷர் என்பதால் அவர் அணியில் இருக்க வேண்டுமென்று தோனி விரும்பினார்" என்றார்.

மேலும் "கடந்த 6 மாதங்களாக பாண்ட்யாவின் உடற்தகுதி கேள்விக்குறியாகவே இருக்கிறது. இப்போது மீண்டும் அவருக்கு தோல்பட்டை காயம் என்கிறார்கள். இவருக்கு பதிலாக நல்ல உடல்தகுதியுள்ள வீரரை விளையாட வைக்கலாம். உடல்தகுதி இல்லாத வீரரை அணியில் சேர்த்து அதனால் யாருக்கு என்ன பயன்? இவரால் இப்போது நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும் வீரருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது" என்று பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments