உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்ரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
டி20 கிரிக்கெட்டில் மிகவும் அபாகரமாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பேட்டிங்கில் மிகவும் சொதப்பி வருகின்றது. கெயில், பொல்லார்டு, பிராவோ, பூரான், ரஸல் உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்களை கொண்டிருந்தும் அந்த ரன் குவிக்க திணறி வருகிறது. இங்கிலந்து அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 55 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில், இன்றையப் போட்டியிலும் 150 ரன்கள் கூட எட்ட முடியாமல் 143 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் லெவிஸ் மட்டுமே 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். முக்கியமான வீரர்களான பூரான் 12 (7), கெயில் 12 (12), பொல்லார்டு 26 (20), ரஸல் 5 (4), ஹெட்மயர் 1 (2) என ஏமாற்றவே செய்தனர். பிராவோவும் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து இறுதியில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென்னாப்ரிக்கா தரப்பில் மகாராஜ் அற்புதமாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் சாய்த்தார். டுவைன் ப்ரெடொரியஸும் 2 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.
இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரசிகர்களை மிகவும் சோதித்தவர் சிம்மன்ஸ் தான். வெஸ்ட் இண்டீஸ் அணியில் லெவின் உடன் தொடக்க வீரராக களமிறங்கியவர் சிம்மன்ஸ். கடந்தப் போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் தொடக்கத்தில் நிதானமாக விளையாடலாம் என்ற நினைப்பில் இருந்து முதல் 3 ஓவர்களில் தடுப்பாட்டம் ஆடினர். வெறும் 6 ரன்கள் மட்டுமே 3 ஓவர்களில் எடுக்கப்பட்டது.
நான்காவது ஓவரில் இருந்து லெவிஸ் தனது அதிரடி தொடங்கினார். அவர் அவ்வவ்போது சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி வந்தார். ஆனால், சிம்மன்ஸ் தனது தடுப்பாட்டத்தையே தொடர்ந்தார். 10 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்தது. அதில் லெவிஸ் மட்டுமே 33 பந்துகளில் 50 ரன்கள் எட்டிவிட்டார். ஆனால், சிம்மன்ஸ் 27 பந்துகளை சந்தித்து வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதன்பிறகும் சில ஓவர்கள் களத்தில் இருந்த அவர் சில பந்துகளையும் சந்தித்தார். ஆனால், அப்போதும் எல்லைக்கோட்டிற்கு பந்துகளை விளாச வில்லை. இறுதியில் 14வது ஓவரில் 35 பந்துகளை சந்தித்த நிலையில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.
அதிக பந்துகளை வீணடித்து குறைவான ரன்கள் மட்டுமே எடுத்த சிம்மன்ஸை ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்னாப்ரிக்கா அணி விளையாடி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments