தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டீ காக் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தநிலையில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இனம், நிறம் ரீதியாக எந்த மக்களும் ஒடுக்கப்படக்கூடாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியினர் முழங்காலிட்டு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் சபதம் ஏற்றனர். இதையடுத்து இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடந்த வெஸ்ட் இன்டீஸூக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்க வேண்டிய நிலையில் விக்கெட் கீப்பர் டீ காக் தனிப்பட்ட காரணங்களால் களமிறங்கவில்லை என்று தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து கிளாசன் களமிறக்கப்பட்டார். இனவெறிக்கு எதிராக வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்கும்போது குயின்டன் டீ காக் மட்டும் வராதது பெரும் கண்டனத்தைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் அவரை பலரும் வசைபாடினர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் தன்னுடைய விளக்கத்தை அளித்து மன்னிப்பும் கோரியிருந்தார். "நான் முழங்காலிட்டு அமர்வது மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுகிறது என்றால், நான் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அவர் கூறினார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் குயின்டன் டீ காக் மண்டியிட்டு இன ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான தனது சைகையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments