Advertisement

"இந்தியா - பாக். ஆட்டத்தின்போது வென்டிலேட்டரில் இருந்த பாபர் அசாமின் தாய்!"

கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தாய் உடல்நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்தியா உடனான ஆட்டத்தின் போதும் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார் என பாபரின் தந்தை உருக்கமாக பேசியிருக்கிறார்.

இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகளை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையில் முன்னணியில் இருக்கிறது பாகிஸ்தான். கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ள பாகிஸ்தானின் இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம். மூன்று ஆட்டங்களில் இரண்டு அரைசதங்களைப் பதிவுசெய்துள்ள பாபர் அசாம், சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார்.

"களத்தில் பாபர் அசாமின் செயல்கள் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக உங்களை நினைக்க வைக்கலாம். ஆனால் உள்ளுக்குள் அவருக்கு இருக்கும் வலி வெளியில் யாருக்கும் தெரியாது" என்கிறார் அவரின் தந்தை சித்திக்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாபரின் தந்தை சித்திக், " என் தேசம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகளை வெளிப்படுத்துகிறேன். அதற்கு முன்னதாக மூன்று வெற்றிகளைப் பெற்றதற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு பெரிய சோகம் நிகழ்ந்துள்ளது.

ஆம், உலகமே உற்றுநோக்கிய இந்தியாவுக்கு எதிரான போட்டி நடந்த அன்று பாபரின் தாயார் வென்டிலேட்டரில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தாயின் மோசமான உடல்நிலை காரணமாக, பாபர் கடந்த மூன்று ஆட்டங்களையும் கடுமையான மன உளைச்சலுக்கு மத்தியில் தான் விளையாடினார். இது இக்கட்டான நேரத்தில் இந்தியா உடனான ஆட்டத்தை காண நான் மைதானத்துக்கு வரக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால், பாபர் பலவீனமடையக்கூடாது என்பதற்காக வந்தேன். இந்த விஷயத்தை இப்போது பகிர்வதன் நோக்கம், காரணமில்லாமல் நமது ஜாம்பவான்களை விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவே" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

சித்திக் வெளியிட்ட இந்தப் பதிவு சில மணிநேரங்களில் வைரலாக சென்றது. ரசிகர்கள் பலரும் இப்போது பாபர் அசாமை பாராட்டி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments