Advertisement

டி20 உலகக் கோப்பை: ஃபார்முக்கு திரும்புவார்களா இந்திய அணியின் 3 நட்சத்திரங்கள்?

துளியும் குறைத்து மதிப்பிட முடியாத ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்த வேண்டுமென்றால் இந்த 3 நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டியது அவசியமாகிறது.
 
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றின் குரூப்-2-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2-வது லீக்கில் நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 110 ரன்னில் சுருண்டு மற்றுமொரு படுதோல்வியை தழுவியது. அடுத்தடுத்து இரு படுதோல்விகளினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமைக்கு இந்திய அணி தள்ளப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இன்று (புதன்கிழமை) அபுதாபியில் சந்திக்கிறது. இதில் கட்டாயம் வெற்றி பெறுவதோடு ரன்ரேட்டை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவின் ஆட்டம் இருக்க வேண்டும். தோற்றால் அரை இறுதி வாய்ப்பு முழுமையாக நழுவிவிடும். இச்சூழலில், துளியும் குறைத்து மதிப்பிட முடியாத ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்த வேண்டுமென்றால் இந்த 3 நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டியது அவசியமாகிறது.
 
image
கேஎல் ராகுல்
 
இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங் படு சொதப்பலாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல், கடந்த இரு ஆட்டங்களிலும் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்களிலும், நியூசிலாந்து அணிக்கெதிராக 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இன்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல் உத்வேகத்துடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
image
ரோகித் சர்மா
 
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதனால் அடுத்து நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்தார். ஆனால் அதிலும் எந்தவித ஆக்ரோஷமும் இன்றி 14 ரன்களில் சரண் அடைந்து வெளியேறினார். இன்றைய ஆட்டத்திலாவது ரோகித் சர்மா ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
 
image
ஹர்திக் பாண்டியா
 
அணியில் ஹர்திக் பாண்டியாவின் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அணியில் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஹர்திக் பாண்டியா தொடர்வது அணிக்குள் 6-வது பந்துவீச்சாளரைச் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. முழுமையாக பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கும் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கிலும் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை. அணி கொடுத்திருக்கும் வாய்ப்பை ஹர்திக் பாண்ட்யா சரியாக பயன்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments