மூன்று காரணங்களை வைத்து ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெறும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். அந்த 3 காரணங்கள் என்னென்ன?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று மாலை நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. இந்த ஆட்டத்தை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த ஆட்டத்தின் முடிவுதான் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளின் அரையிறுதி கணக்குகளை மாற்றக்கூடியதாக அமைந்துள்ளது.
3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலில்லாமல் அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். அதோடு, இந்திய அணி ‘சூப்பர்-12’ சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். மாறாக நியூசிலாந்து அணி தோற்கும் பட்சத்தில், அரை இறுதி வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இருந்து இந்தியா தப்பிக்கும். அதாவது இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியாவை தோற்கடித்தால் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்குள் நுழைந்து விடலாம். இதனால் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஜெயிக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
பலம்பொருந்திய நியூசிலாந்து அணியை கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் வீழ்த்துமா என்று அலசினால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கின்றன.
அச்சுறுத்தும் சுழல் பந்துவீச்சு
சுழற்பந்து வீச்சு தான் ஆப்கானிஸ்தான் அணியின் பலமே என்பதால் அவர்கள் நியூசிலாந்தை நிச்சயமாக தடுமாற செய்ய வாய்ப்பிருக்கிறது. காயம் காரணமாக விளையாட முடியாமல் இருந்த முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் வருகை புரிவது அந்த அணிக்கு பெரும் பலமாக அமையும். அவருடன் ரஷித் கானும் இணைந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனவே இன்றைய போட்டியில் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தான் அணி அதிசயம் நிகழ்த்தும் என்று நம்பலாம்.
நியூசிலாந்தின் பலவீனமான மிடில் ஆர்டர்
நியூசிலாந்து அணியின் பெரிய பலவீனம் மிடில் ஆர்டர் தான். நமீபியாவிற்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்திருந்தது. 15 ஓவர்களில் 91 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. இதுவரை ஆட்டம் முழுவதும் நமீபியாவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால், கடைசி 5 ஓவர்களில் பின்வரிசை வீரர்கள் அதிரடி காட்டி நியூசிலாந்தின் ஸ்கோரை 163 ஆக உயர்த்தினர். போட்டியையும் வென்றது.
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில் 93 ரன்களை அடித்திருந்தார். அவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவே இல்லை. எனவே நியூசிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங் ஆர்டரில் இருக்கும் பலவீனத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால், ஆப்கானிஸ்தான் அணி பக்கம் வெற்றி திரும்ப வாய்ப்பிருக்கிறது.
குறைத்து மதிப்பிட முடியாத அணி
ஆப்கானிஸ்தான் அணியை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிடவே முடியாது. 2016 உலகக்கோப்பை டி20 போட்டியில் கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்த ஒரே அணி ஆப்கானிஸ்தான் தான் என்பதை மறக்கமுடியாது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை மிகச்சிறப்பாகவே விளையாடி வருகின்றனர். ஸ்காட்லாந்தை 60 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி வென்றிருக்கின்றனர். நமீபியாவை 98 ரன்களில் சுருட்டியிருக்கின்றனர். பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் கூட வெற்றிக்கு அருகில் வந்தே தோல்வியடைந்தனர்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களை உலகத்தரம் வாய்ந்த அணியாக முன்னிறுத்திவிட்டே தாயகம் திரும்ப ஆப்கானிஸ்தான் அணி முனைப்புக் காட்டி வருகிறது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே நடக்கும் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்கனியை ருசிக்க சிரத்தை எடுக்கும் என்பதில் ஐயமில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments