டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் போனால் ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியை விராட் கோலி இழக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கெதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து சந்தித்த இரு படுதோல்விகளினால், தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கியுள்ளது. மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய பரிதாப நிலைமைக்கு இந்திய அணி தள்ளப்பட்டு உள்ளது. இதனால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தால், விராட் கோலிக்கு இது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஐசிசி தொடர்களில் இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றுக்கொடுக்காத விராட் கோலி, கேப்டனாக தனது கடைசித் தொடரில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதற்கும் தற்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் விராட் கோலி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வீரர்கள் தேர்வு, பேட்டிங் வரிசையில் மாற்றம் என கோலி மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறும் பட்சத்தில், ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியை விராட் கோலி இழக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியான தகவலில், ''இப்போது பிசிசிஐ மகிழ்ச்சியாக இல்லை. கோலியின் கேப்டன்ஷிப் மீது அதிருப்தி நிலவுகிறது. இந்திய அணிக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஒருவேளை அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடிந்தால் 'சூழ்நிலை' மாறக்கூடும். ஆனால், இப்போது என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ கேட்டால், விராட் கோலி ஒருநாள் அணிக்கான கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றார் அவர்.
இதையும் படிக்கலாம்: இந்தியாவின் டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கிறார் கே.எல்.ராகுல்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments