Advertisement

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்: மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பிசிசிஐ

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்வது குறித்து மத்திய அரசின் அனுமதிக்காக பிசிசிஐ காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இத்தொடர்கள் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 26 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் எனும் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த நாட்டிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்துள்ளன. எனவே, 'ஒமிக்ரான்' கொரோனா பரவல் காரணமாக டிசம்பர் 8 அன்று திட்டமிட்டபடி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்புமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 
 
இதற்கிடையே இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ‘ஏ’ அணியின் சுற்றுப்பயணத்தை தொடர அனுமதித்ததற்காக, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தென்னாப்பிரிக்க சர்வதேச உறவுகளுக்கான அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது. இந்திய வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தென்னாப்பிரிக்கா எடுக்கும் என்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய 'ஏ' அணி வீரர்கள் பயோ-பபுள் சூழலில் வைக்கப்படுவார்கள் என்றும் அந்நாடு உறுதியளித்துள்ளது.
 
image
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ''நிலைமையை பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்கும். இதுகுறித்து முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. அதைப் பற்றி யோசிப்போம். வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமே பிசிசிஐயின் முதல் முன்னுரிமை. இதற்காக முடிந்த அனைத்தையும் செய்வோம். வரும் நாட்களில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்” என்றார்.
 
image
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் விஷயத்தில் மத்திய அரசின் அனுமதிக்காகவும் பிசிசிஐ காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்ட வீரர்கள், தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும்முன் 8 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டனர். இருப்பினும், ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், கே.எல் ராகுல் உள்ளிட்டோர் பயோ-பபுள் வளையத்திற்குள் சேர்வது குறித்து பி.சி.சி.ஐ.யிடமிருந்து தகவல் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments