இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்துள்ளார். செஞ்சூரியன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ராகுல் பதிவு செய்துள்ள ஏழாவது சதம் இது. நடப்பு ஆண்டில் அவர் இரண்டு சதம் பதிவு செய்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் கண்டு ஐந்து சதம் பதிவு செய்துள்ளார் ராகுல். இதன் மூலம் சேவாக்கை பின்னுக்கு தள்ளியுள்ளார். அதிகபட்சமாக வெளிநாடுகளில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் 15 சதங்களை பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடி உள்ள அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதம் பதிவு செய்துள்ளார்.
சிறப்பான தொடக்கம் அமைந்தும் 199 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணிக்கு ராகுலின் சதம் பலம் சேர்த்துள்ளது. இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை சேர்த்துள்ளது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ராகுல் மற்றும் மயங்க் 117 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments