இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது இந்தியா. ஆனால் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணிக்காக கேப்டன் எல்கர் மற்றும் பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இருப்பினும் அணியை தோல்வியிலிருந்து அவர்களால் மீட்க முடியவில்லை.
இந்திய அணி சார்பில் பும்ரா 3, ஷமி 3, சிராஜ் 2 மற்றும் அஷ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆசியாவுக்கு வெளியே நடப்பு ஆண்டில் மட்டுமே 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது இந்தியா. பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியா), லார்ட்ஸ் மற்றும் ஓவல் (இங்கிலாந்து), செஞ்சூரியன் (தென்னாப்பிரிக்கா).
“இந்த தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளோம். மழையினால் ஒரு நாள் ஆட்டம் முழுவதும் இந்த போட்டியில் விளையாடவில்லை. இருந்தும் முடிவை எட்டியுள்ளோம். கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அணியின் பவுலர்களும் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்” என வெற்றி பெற்ற பிறகு தெரிவித்திருந்தார் கோலி.
இந்த போட்டியில் கே.எல்.ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments