19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நிவேதன் ராதாகிருஷ்ணன், தனது தனி திறமை மூலம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
சென்னையில் பிறந்த நிவேதன் ராதாகிருஷ்ணன், தற்போது ஆஸ்திரேலியாவின் அண்டர் 19 அணியில் இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சில் இரு கைகளாலும் திறம்பட சுழற்பந்து வீசுவதே இவரின் தனிச்சிறப்பாகும். கடந்த 2013-ம் ஆண்டு நிவேதனின் குடும்பம் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. 10 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அவர், தமது கிரிக்கெட் ஆற்றலால் 16 வயதுக்குப்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார். அதன்பின்பு 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகளிலும், நிவேதன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு விளையாடியுள்ளார்.
அதன்படி, 2017-ம் ஆண்டு காரைக்குடி காளை அணியிலும், 2018-ம் ஆண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காகவும் நிவேதன் விளையாடியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மிக இளையோர் அணியில் இணைந்த அவர், அந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியிலும் விளையாடினார். கடந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் நெட் பந்துவீச்சாளராகவும் நிவேதன் இருந்துள்ளார்.
கடந்தாண்டு ஆஸ்திரேலிய உள்நாட்டு அணியான டாஸ்மானியன் டைகர்ஸ் அணிக்காக நிவேதன் ராதாகிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், அண்டர் 19 உலகக்கோப்பையில் தாம் விளையாடிய முதல் போட்டியிலேயே நிவேதன் ராதாகிருஷ்ணன் முத்திரை பதித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர், மேற்கிந்தியத் தீவுகளில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த நிவேதன் ராதாகிருஷ்ணன், மூன்று விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நிவேதன் விளங்கினார்.
இதனால் அடுத்துள்ள போட்டிகளில் இந்த சென்னைக்காரர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு கைகளையும் ஒப்பான திறத்தோடு பயன்படுத்தப்படுவது ஆம்பிடெக்ஸ்ரஸ் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வலதுகை, இடதுகை என இரு வகை சுழற்பந்து வீச்சு ஆற்றலையும் வெளிப்படுத்தி வருகிறார் நிவேதன் ராதாகிருஷ்ணன். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு, இடது கையில் சுழற்பந்து வீசுவதும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு, வலது கையில் சுழற்பந்து வீசுவதும் என சூழ்நிலைகளுக்கு ஏற்ப இருவிதமாக பந்துவீசி நிவேதன் ராதாகிருஷ்ணன் அசத்தி வருகிறார். இதனாலேயே குறுகிய காலத்தில் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியில் இடம்பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான நிவேதன் இடதுகை பேட்ஸ்மேனாகவும் உள்ளார். மேற்கு இந்திய தீவுகளின் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் தான் நிவேதனின் ஆதர்ஷ் நாயகன் என்று கூறப்படுகிறது.
दिलचस्प है, क्रिकेट में पहली बार एक गेंदबाज अपने दोनों हाथों से गेंदबाजी
— माधव कुमार (@fakeerfirangi) January 14, 2022
In the ever involving game of cricket ,he has a point.#NivethanRadhakrishnan #ICCUnder19WC22 pic.twitter.com/9y1ytcHSYD
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments