கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார் ஜேசன் ஹோல்டர்.
வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் நான்கு போட்டிகள் நடந்து முடிந்து இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 160 ரன்களை மட்டும் சேர்த்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டர். கடைசி ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர், அந்த ஓவரின் 2வது பந்தில் கிறிஸ் ஜோர்டானையும், 3வது பந்தில் சாம் பில்லிங்ஸையும் (41), 4வது பந்தில் அடில் ரஷீத் மற்றும் 5வது பந்தில் சாகிப் மஹ்மூத்தையும் வீழ்த்தி இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தார்.
கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார் ஜேசன் ஹோல்டர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் ஜேசன் ஹோல்டர் கைப்பற்றினார். டி20 கிரிகெட்டில் டபுள் ஹாட்ரிக் எடுக்கும் முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவர்தான்.
இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய சாதனையாளர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ஜேசன் ஹோல்டர். இதற்கு முன்பாக மலிங்கா, ரஷீத் கான் மற்றும் கர்டிஸ் காம்ஃபெர் ஆகிய மூவரும் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
இதையும் படிக்க: ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணிகள் அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments