Advertisement

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? - போட்டியில் 5 வீரர்கள்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, விராட் கோலி விட்டுச் செல்லும் இடத்தை நிரப்பப்போவது யார் என்பது புதிராக இருக்கிறது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த கோலிக்கு மாற்றாக யாரை தேர்வு செய்யலாம் என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சவாலாக மாறி நிற்கிறது. இந்த நிலையில் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற போட்டியில் 5 வீரர்கள் போட்டியில் உள்ளனர்.

image

ரோஹித் ஷர்மா

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மாவுக்கே டெஸ்ட் போட்டியில் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎல், ஒயிட் பால் தொடர்களில் கேப்டனாக தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். டெஸ்டிலும் கடந்த ஆண்டு இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்துள்ளார். ஆனால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவங்களிலும் கேப்டனாக இருந்தால், பணிச்சுமை அதிகரித்து அவரின் பேட்டிங் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஓர் கணிப்பு இருக்கிறது.

மேலும், ரோஹித் ஷர்மா வரும் ஏப்ரல் மாதத்தில் 35 வயதை எட்டுவார். இவ்வாறிருக்கையில் ரோஹித் ஷர்மா இன்னும் 3-4 ஆண்டுகள் மட்டுமே விளையாடுவார். எனவே நீண்ட காலம் இந்திய அணியை வழிநடத்த உகந்த வீரரை தேர்வு செய்வதே நல்ல தீர்வு.

image

கே.எல்.ராகுல்

டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுபவர் நீண்டகாலம் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்ற நோக்கின்படி பார்த்தால் கேஎல் ராகுலை கேப்டனாக நியமிக்கலாம். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருப்பதுடன், இந்திய அணியின் துணை கேப்டனாக, கேப்டனாக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு உள்ளது. இதனால் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்கும் தகுதி இவருக்கு உள்ளது. ஆனால் டெஸ்ட் அணியை வழிநடத்தும் அளவுக்கு ராகுலுக்கு அனுபவம் இல்லை என்றாலும், ஒருவேளை நியமித்தால் நாட்கள் செல்லச்செல்ல வெற்றியில் முன்னேற்றம் கிடைக்கும் என நம்பலாம்.

image

ரிஷப் பண்ட்

நிகழ்காலத்தை கருத்தில் கொள்ளாமல் இந்திய டெஸ்ட் அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற கண்ணோட்டதுடன் பார்த்தால் அதற்கு ரிஷப் பண்டும் தகுதியானவரே. 24 வயது நிரம்பிய இவரின் பேட்டிங் திறமை பற்றி விளக்கத் தேவையில்லை.கேப்டன்ஷிப் அனுபவம் என்று பார்த்தால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக கேப்டன்ஷிப் செய்தவர். 2007இல் தோனியை கேப்டனாக நியமித்தது போல் தற்போது ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்து பார்க்க பிசிசிஐ முடிவு எடுத்தால் மிகச்சரியானதாக இருக்கும். மேலும் முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூட இவரை கேப்டனாக நியமிக்கலாம் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

image

ரவிச்சந்திரன் அஸ்வின்

இதற்கு சாத்தியம் குறைவு என்றாலும் டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உள்ளது என்பதே நிதர்சனம். அஸ்வின் கிரிக்கெட் நுணுக்கங்களில் சிறந்தவர். ஆக்கோரஷமாக விளையாட கூடியவர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக வலம் வரும் அஸ்வின், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக கேப்டன்ஷிப் செய்தவர், அத்துடன் ரஞ்சி கோப்பையில் இதற்கு முன் தமிழக அணிக்காக கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கொண்டவர்.

image

ஜஸ்பிரித் பும்ரா

உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா. இந்தியாவின் மூன்று வகையான அணிக்கும் பந்து வீச்சு தலைவராகவும் இருக்கிறார். அவரை விட மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லை என்னும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். பந்துவீச்சாளர்கள் கேப்டனாக இருந்தால் அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இருக்காது.

இதையும் படிக்கலாம்: 'கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் மிகப்பெரிய கவுரவமாக கருதுவேன்' - பும்ரா

மேலும் தற்போது வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டனாக நியமிக்கும் கலாச்சாரம் தொடங்கியுள்ளதால் பும்ராவுக்கும் கேப்டன் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. பும்ரா தற்போது தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “பிரதர்! அடுத்த தலைமுறையினரின் கேப்டன் நீங்கள்” - கோலி குறித்து பாக்.வீரர் முகமது அமீர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments