ஐசிசி தனக்குப் பல வருடங்களுக்குத் தடை விதிக்க உள்ளதாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் டெய்லர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் வீரர் பிரண்டன் டெய்லர், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 - 2021 காலகட்டங்களில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 71 ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி கேப்டனாகப் பணியாற்றியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் அவர் உள்ளார்.
இந்நிலையில் அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை பிரண்டன் டெய்லர் நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- ''2019-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்திய தொழில் அதிபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, ஜிம்பாப்வேயில் 20 ஓவர் போட்டி நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் குறித்து விவாதிப்பதற்காக இந்தியாவுக்கு வர சொன்னார். இந்த விவாதத்துக்காக எனக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று இந்தியா சென்றேன். ஹோட்டலில் தங்கி இருந்த எனக்கு மது விருந்து அளித்தனர். அப்போது எனக்கு கோகைன் என்னும் போதைப்பொருளை தந்தனர். நானும் முட்டாள்தனமாக கொஞ்சம் கோகைனை பயன்படுத்தினேன்.
அடுத்த நாள் அதே நபர்கள் எனது ஓட்டல் அறைக்கு வந்து நான் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை காட்டி மிரட்டினார்கள். சர்வதேச போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ய சம்மதிக்காவிட்டால் அந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று என்னை மிரட்டினார்கள். அவர்கள் மிரட்டியதால் உயிருக்கு பயந்து சூதாட்டத்தில் ஈடுபட சம்மதித்து முன் தொகையாக 15,000 டாலர்கள் பெற்றுக்கொண்டேன்.
வேலை முடிந்ததும் மேலும் 20,000 டாலர்கள் தருவதாக கூறினார்கள். அங்கிருந்து தப்பித்து சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் அந்த பணத்தை பெற்றேன். வீட்டுக்கு வந்த பிறகு மன அழுத்தம் காரணமாக எனது உடல்நலமும் பாதிக்கப்பட்டது.
அந்த தொழில் அதிபர் கொடுத்த பணத்தை திரும்ப;f கேட்டார். நான் பணத்தை திரும்ப;f கொடுக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி.யிடம் நான் உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை. 4 மாதங்கள் கழித்து தான் புகார் செய்தேன். நான் புகார் தெரிவிக்க நீண்ட நாட்கள் தாமதம் செய்ததை ஒப்புக்கொள்கிறேன். எனது குடும்பத்தின் நலனை பாதுகாக்கும் பொருட்டு ஐ.சி.சி.யிடம் தகவல் தெரிவிக்க காலம் தாழ்த்தினேன். இதனை ஐ.சி.சி. புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
நான் எந்தவொரு போட்டியிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கிடையாது. நான் ஏமாற்று பேர்வழி இல்லை. என் மீதான புகார் குறித்த ஐ.சி.சி. விசாரணையில் முழுமையாக பங்கேற்றேன். எனக்கு பல ஆண்டுகள் தடை விதிக்க ஐ.சி.சி. முடிவு எடுத்துள்ளது. இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது கதை கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு சூதாட்ட அணுகுமுறையையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதற்கு பாடமாக இருக்க வேண்டும். எனது வாழ்க்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மறுவாழ்வு மையத்துக்கு செல்ல இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் முன்னேற்றம் - ஹாலப் அதிர்ச்சி தோல்வி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments