Advertisement

தீபக் சாஹர் எழுச்சி முதல் கேஎல் ராகுல் கேப்டன்சி வரை: எப்படி இருந்தது ஒருநாள் தொடர்?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் 3 முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என, ஏற்கனவே தொடரை இழந்தது. இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்ற தென் ப்ரிக்க அணி இந்தியாவை ஓயிட்வாஷ் செய்தது. டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்விக்கு ஒருநாள் தொடரை வென்று கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு இது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தின் 3 முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

image

1.தீபக் சஹாருக்கு வாய்ப்பளிக்கும் நேரம்

288 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், கடைசி கட்டத்தில் தீபக் சாகர் அரைசதம் அடித்து ஆட்டத்தை திசை திருப்பினார். ஆனால் அவரால் அணியை வெற்றிக்கு அருகேதான் கொண்டு செல்லவே முடிந்தது. சிறப்பாக ஆடிய தீபக் சாகர் 31 பந்துகளில் தனது இரண்டாவது ஒருநாள் அரை சதத்தைக் கடந்தார். 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 54 ரன்களை விளாசி லுங்கி கிடி பந்தில் அவுட் ஆனார். அவரும் பும்ராவும், 8-ஆம் விக்கெட்டுக்கு 51 ரன்களை சோ்த்தனர். பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சகார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமாருக்கு பதில் தீபக் சஹாருக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. புவனேஸ்வர் குமார் போலவே பந்துவீசும் திறமை கொண்ட அவர் இளமையானவராகவும் உள்ளார். மேலும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் திறமையையும் கொண்டுள்ளார். இந்திய அணியின் ஆடும் லெவனில் தீபக் சகாருக்கு இடம் கொடுக்க இதுவே நேரம்.

image

தீராத மிடில் ஆர்டர் சொதப்பல்கள்

2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின்பிருந்தே இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் திணறி வருகிறது. ஒருநாள் தொடர்களில் இந்திய அணி போட்டிகளில் சந்திக்கும் மூன்றாவது தொடர் தோல்வி இதுவாகும். 2020இல் நியூசிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி இந்தியாவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. அதே ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 2-1 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. எம்.எஸ். தோனியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் தோல்விகளுக்கு இந்திய வீரர்களின் மிடில் ஓவர் சொதப்பலே மிக முக்கிய காரணமாக உள்ளது. அது பேட்டிங் ஆகட்டும் பந்துவீச்சு ஆகட்டும் இரண்டிலுமே இந்திய அணி மிடில் ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டிருந்தது.

image

கேஎல் ராகுலின் கேப்டன் கனவு?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் கேப்டனாக பணியாற்றினார். அப்போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ரோகித் சர்மா இல்லாத நிலையில், கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் படுதோல்வியுடன் தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா பயணத்தில் அனுபவமில்லாத கே.எல்.ராகுலின் கேப்டன்சி இந்திய அணியின் ஆட்டத்திற்கு சிறிது அளவு கூட பங்களிக்கவில்லை என்பதே உண்மை.

அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற போட்டியில் கேஎல் ராகுல் முன்னணியில் இருக்கும் நிலையில், அவரது தலைமையிலான ஆட்ட முடிவுகள் கேப்டன் தகுதி பற்றிய முக்கிய கவலைகளை எழுப்புகின்றன. ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணி, கடந்த 2 சீசன்களிலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது. புது கேப்டன் தவறுகளில் இருந்து இன்னும் நிறைய பாடங்களை கற்றுக்கொள்வார் என நம்பலாம்.

இதையும் படிக்க: வாஷ் அவுட் ஆன இந்திய அணி - தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்கலங்கிய தீபக் சாஹர்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments