திண்டுக்கல்லில் தேசிய அளவிலான 66-வது ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம். இந்த போட்டியில் 17 மாநிலங்களைச் சேர்ந்த 800 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் 66-வது தேசிய ஜூனியர் பூப்பந்தாட்ட சாம்பியன் ஷிப் போட்டிகள் இன்று 24.02.22 அன்று பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. வருகிற 28 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் செயற்கை புல் தரை மைதானம் உட்பட 7 மைதானங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்னொளியில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ஜம்மு அண்ட் காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த 800 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது.
முன்னதாக பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி தாளாளர் ரகுராம் துவக்கி வைத்த முதல் போட்டியில் மகாராஷ்டிரா ஆண்கள் அணியும் - சத்தீஸ்கர் அணியும் மோதின. இதில், 35-14, 35-11 என்ற புள்ளி கணக்கில் மகாராஷ்டிரா ஆண்கள் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கர்நாடக ஆண்கள் அணியும் - மும்பை அணியும் மோதின. இதில், 35-12, 35-07 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகா அணி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் ஆந்திரா அணியும் - ஒடிசா அணியும் மோதியதில் 35-14, 35-19 என்ற புள்ளிக் கணக்கில் ஆந்திரா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கிறிஸ்டல் கோப்பையும் ரூ. 3 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments