சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவை, ஏலத்தில் எடுக்காதது ஏன் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
15-வது ஐ.பி.எல். சீசனுக்கான ஏலம் பெங்களூரு ஐடிசி கார்டினியா ஓட்டலில், கடந்த இரு நாட்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தில், இளம் நட்சத்திர வீரர்கள் பலர், அடிப்படை விலையை விட கூடுதல் விலைக்கு ஏலம் போனார்கள். எனினும், ஐ.பி.எல் வரலாற்றில் ஒருகாலத்தில் மாஸ் காட்டிய வீரர்கள் இந்த ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படவிலை. அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா ஏலத்தில் எடுக்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மிஸ்டர் ஐ.பி.எல்., சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியால் அடிப்படை விலைக் கொடுத்துக் கூட எடுக்கப்படாததை அடுத்து, சி.எஸ்.கே. அணியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல், டூ பிளசிஸ் எடுக்கப்படாததும் வருத்தத்தை அளித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 12 வருடங்களாக சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் நிலையான ஆட்டக்காரராக திகழ்ந்தார். சென்னை அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது எங்களுக்கும் கடினமாகவே இருந்தது. ஆனால், அணியின் தேவையை கருத்தில் கொண்டே வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். மற்ற அனைத்தையும் விட அணியின் தேவையே முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த அணியில் சுரேஷ் ரெய்னாவிற்கான தேவை இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாகவே அவரை நாங்கள் எடுக்கவில்லை. இதேபோல் கடந்த பத்தாண்டுகளாக அணியில் இருந்துவந்த டூ பிளசிஸையும், சுரேஷ் ரெய்னாவையும் நிச்சயமாக அனைவரும் மிஸ் செய்வோம். சென்னை அணியில் அவர்களது இடத்தை நிரப்புவது எளிதான விசயம் அல்ல” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments