ஜூனியர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் யாஷ் துல், தனது அறிமுக ரஞ்சிக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் சதம் பதிவு செய்துள்ளார். 133 பந்துகளில் அவர் சதம் கண்டுள்ளார்.
டெல்லி அணிக்காக நடப்பு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் தமிழ்நாடு அணிக்கு எதிராக இந்த சதத்தை விளாசியுள்ளார். இன்று தொடங்கியுள்ள இந்த தொடர் வரும் ஜூன் 26-ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது. மொத்தம் 38 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.
டெல்லி அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 150 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. அண்மையில் முடிந்த ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக முறையே 82 மற்றும் 110 ரன்கள் அவர் எடுத்திருந்தார். எதிர்வரும் ஐபிஎல் சீசனில் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
அதோடு தனது முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சதம் பதிவு செய்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் ஷர்மா வரிசையில் இணைந்துள்ளார். இவர்களும் இந்த சாதனையை தங்களது முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் படைத்தவர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments