Advertisement

ஐபிஎல் 2022: இந்த படை போதுமா? - வெற்றி வேட்கையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் - முழு அலசல்

பல புதிய மாற்றங்களுடன் புதுப்பித்துக் கொண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம் என்ன, பலவீனங்கள் என்னென்ன?
 
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்க சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பின் 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இம்முறையாவது ஐபிஎல் கோப்பையை வென்று, தங்களது முதல் கேப்டனான வார்னேவுக்கு சமர்ப்பிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 2022 சீசனுக்காக இதுவரை இல்லாத அளவு பல புதிய மாற்றங்களுடன் புதுப்பித்துக் கொண்டுள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம் என்ன, பலவீனங்கள் என்னென்ன? அலசுவோம்...

image

பலம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இம்முறை சம பலத்துடன் உள்ளது. மெகா ஏலத்துக்கு முன்பாக கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷாஹ்வி ஜெய்ஸ்வால் ஆகிய 3 வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்க வைத்திருந்தது. இதையடுத்து நடைபெற்ற ஏலத்தின் முடிவில் ரவிச்சந்திரன் அஷ்வின், ட்ரெண்ட் போல்ட், தேவ்தத் படிக்கல், சிம்ரோன் ஹெட்மயேர், பிரசித் கிருஷ்னா, யுஸ்வென்ற சஹால், ரியன் பராக், கேசி கரியப்பா,  நவ்தீப் சைனி, ஓபேத் மெக்காய், அனுனாய் சிங், குல்தீப் சென், கருண் நாயர், துருவ் ஜுரேல், குல்தீப் யாதவ், தேஜாஸ் பரோகா, சுபம் கர்வால், ஜேம்ஸ் நீசம், நாதன்-கோல்டெர்-நைல், ராசி வன் டேர் டுசென், டேரில் மிட்செல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிக்கலாம்: நெருங்கும் ஐபிஎல் 2022 : லக்னோ அணியின் பலம், பலவீனம் இதுதான் - ஒரு விரிவான அலசல்!

பேட்டிங்கில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் அணிக்கு நிறைய சாய்ஸ்கள் உள்ளன. ‘ஐபிஎல் தொடரில் இவரது ஆட்டத்தை பார்ப்பதற்கே மிகவும் அற்புதமாக இருக்கும்’ என ரோஹித் ஷர்மா புகழ்ந்து தள்ளிய கேப்டன் சஞ்சு சாம்சன், மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டுவதில் கில்லாடியான இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், யஷஸ்வி, தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மேயர் என அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. இதே போல் ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் என்று சாதுர்யமாக பவுலிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்களும் அங்கம் வகிக்கிறார்கள். துல்லியமான பந்து வீச்சின் மூலம் மிரட்டக்கூடிய நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, நாதன் கவுல்டர்-நைல்லும், நவ்தீப் சைனி என தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுடன், வேகப்பந்து வீச்சில் அசுரப் பலத்துடன் நிற்கிறது ராஜஸ்தான் அணி. இவர்களுடன் ஓபேத் மெக்காய், டேரில் மிட்செல் இருவரும் வேகப்பந்துவீச்சுடன் ஆல்-ரவுண்டர்களாகவும் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

இதையும் படிக்கலாம்: ஐபிஎல் 2022 : அறிமுக தொடரில் சோபிக்குமா குஜராத் டைட்டன்ஸ்? - ஓர் முழு அலசல்

image

பலவீனம்

ஓபனிங் பேட்ஸ்மேன்களாக யாரை இறங்க வைப்பது என்ற குழப்பம், ராஜஸ்தானில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இம்முறையும் பேட்டிங்கில் பெரும் பட்டாளமே உள்ள சூழலில், போட்டிக்குப் போட்டி ஓப்பனர்களை மாற்றி, நிலையற்றத் தன்மையை உருவாக்கமால் சரியான வியூகங்களை வகுக்கக் வேண்டியது அணிக்கு மிகவும் முக்கியம். பெரும்பாலும் திறமையான வீரர்கள் நிரம்பிய அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் தெரிந்தாலும் ஆல்-ரவுண்டர்களை பொறுத்தவரையில் சராசரியாகவே இருக்கிறார்கள். ஜிம்மி நீஷம், கே.சி. கரியப்பா உள்ளிட்ட ஆல்-ரவுண்டர்கள் கடந்த சீசன்களில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. மேலும் இவர்கள் ஃபினிஷர்களாக சோபிக்கவில்லை. ரியான் பராக்கிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் அதனை வீணடித்து  வருகிறார்.

அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சன் இப்போது நல்ல ஃபார்மில் இருந்தாலும், கடந்த சீசன்களில் அதை இறுதிவரை கடைப்பிடிக்க தவறியுள்ளார். இதுவும் அந்த அணி இதுவரை சந்தித்த பின்னடைவுகளுக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. இந்த பலவீனங்களை களைந்து சோபிக்க வேண்டியது கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அவசியமாகும்.

இதையும் படிக்கலாம்: அச்சறுத்தும் பேட்டிங்; வலுவான பவுலிங்; பயம் காட்டும் காயம் -இதுதான் SRH பலம், பலவீனம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments