ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அதற்காக தற்போது ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. வரும் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 வரையிலான இந்த தொடரில் இரு அணிகளும் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகருக்கு கொலை மிரட்டல் வந்ததாக சொல்லப்பட்டது. அதை தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
“உங்கள் கணவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால் அவர் உயிருடன் நாடு திரும்ப மாட்டார்” என ஆஷ்டன் அகரின் மனைவிக்கு சமூக வலைதள பதிவு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
“அந்த சமூக வலைதள பதிவு குறித்து நாங்கள் அறிவோம். அது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இரு நாட்டு அரசு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இது மாதிரியான சமூக வலைதள பதிவுகளை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. இப்போதைக்கு இது குறித்து வேறெதுவும் சொல்வதற்கு இல்லை” என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், பாகிஸ்தானில் உள்ள தாங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments