Advertisement

பும்ரா, ஷமி பந்துவீச்சில் திணறும் இலங்கை வீரர்கள் - முதல் நாள் ஆட்டம் முடிவு என்ன?

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டி20 தொடரை முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில், பகலிரவு போட்டியாக இன்று துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

image

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் (4) மற்றும் ரோகித் சர்மா(15) இருவரும் அவுட்டாகினர். தொடர்ந்து ஹனுமா விகாரியும், விராட் கோலியும் இணைந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹனுமா விகாரி 31 ரன்கள் எடுத்த நிலையில், ஜெயவிக்ரமா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயஸ் அய்யரை தவிர மற்ற பேட்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய ஸ்ரேயஸ் அய்யர் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 59.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் லசித் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

image

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கரணரத்னே (4) மற்றும் குசல் முண்டிஸ் (2) வந்த வேகத்தில் வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய மேத்தீவ்ஸ் ஓரளவு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

image

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி இந்தியாவை விட 166 ரன்கள் பின்தங்கியுள்ளது. டிக்வெல்லா 13 ரன்களுடனும், லசித் எம்புல்டெனியா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். நாளை மதியம் 2 மணிக்கு இரண்டாம் நாள் ஆட்டம் துவங்குகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments