இலங்கைக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், மைதானத்தில் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வந்தது. இதில், டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி இந்த தொடரையும் கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தகுதிப் போட்டி என்பதால், மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்களில் வெற்றிபெற்ற இந்திய அணி, பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில், 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேறியது. பின்னர் வெற்றி கோப்பையை வாங்கிய கேப்டன் ரோகித் சர்மா, அந்தக் கோப்பையை ப்ரயன்க் பன்ச்சல் மற்றும் சவுரவ் குமார் ஆகிய இருவரிடம் ஒப்படைத்தார்.
இந்த இருவரின் கையில் கோப்பை இருந்த நிலையில்தான் இந்திய வீரர்களும் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். ஆடும் வெலனில் இல்லாநிலையில், இவர்களிடம் கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை கொடுக்க காரணம் இருந்தது. அது என்னவெனில், ரோகித் சர்மா கோப்பையை ஒப்படைத்த இருவரில் ஒருவரான ப்ரயன்க் பன்ச்சால் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர். துவக்க வீரரான இவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
இதேபோல், மற்றொருவரான சவுரவ் குமாரும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற இவருக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் இருவரையும் கௌரவிக்கும் விதமாக கேப்டன் ரோகித் சர்மா, அவர்களிடம் கோப்பையை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
— Addicric (@addicric) March 14, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments