டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரான ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டும் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அந்த அணி, தனது திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.
15-வது சீசனுக்கான ஐபிஎல் டி20 சூப்பர் லீக் போட்டிகள், மும்பை மற்றும் புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் ரோகித் சர்மா தலையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து, மும்பை அணியை வீழ்த்தியது. இதன்மூலம், இந்த சீசனின் முதல்போட்டியிலேயே, தனது முதல் வெற்றியை டெல்லி அணி பதிவு செய்தது. இந்தப்போட்டியில் டெல்லி அணியில், 2 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களமிறங்கினர்.
இந்நிலையில், டெல்லி அணியால் 6.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியில், மிகச் சிறந்த வீராராக வலம் வரும் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம் பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தநிலையில், நாளை முதல் 3 ஒருநாள் போட்டிகளும், ஒரு டி20 போட்டியும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில், ஆடும் லெவனில் உள்ள மிட்செல் மார்ஷ், வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஒருநாள் தொடரில் இருந்து மிட்செல் விலகியுள்ளார்.
இந்தத் தொடரை முடித்துக்கொண்டு டேவிட் வார்னரும், மிட்செல்லும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஐபிஎல்லில் பங்குபெற இருந்தனர். ஆனால், தற்போது காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது பரிசோதனை அறிக்கை வந்தப்பிறகே முழுவிபரங்கள் தெரியவரும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃ பின்ச் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியவர் 30 வயதான மிட்செல் மார்ஷ். அதனாலேயே டெல்லி அணி 6.5 கோடி ரூபாய் கொடுத்து மிட்செல்லை ஏலத்தில் எடுத்தது. கடந்த 2020-ல் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற மிட்செல் மார்ஷ், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு போட்டியுடன் விலகினார். கடந்த ஆண்டு பயோ பபுள் காரணமாக, ஐபிஎல்லில் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டும் மிட்செல் மார்ஷ் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments