Advertisement

பிரச்னை சிவம் துபே இல்லை; ப்ராவோவின் அந்த ஒரு ஓவர் சிஎஸ்கேவிற்கு சொல்லும் மெசேஜ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதித ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் 210 ரன்களை அடித்திருந்த போதும் சென்னை அணி அந்த ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

சிஎஸ்கேவின் அணித்தேர்வே இன்றைக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ப்ளேயிங் லெவனில் எக்கச்சக்க மாற்றங்கள் இருந்தது. டெவன் கான்வே, சாண்ட்னர், மில்னே ஆகியோர் பென்ச்சில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த மூவரில் டெவன் கான்வே பென்ச்சில் வைக்கப்பட்டது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. சென்னை அணியின் வரலாற்றில் இரண்டு ஓப்பனிங் ஸ்லாட்களில் ஒரு ஓப்பனிங் ஸ்லாட் வெளிநாட்டு வீரருக்குத்தான் என்பது எழுதப்படாத விதி. அரிதினும் அரிதாகத்தான் அதிலிருந்து விலகி இரண்டு இந்திய ஓப்பனர்கள் ஒரு சில போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். டூப்ளெஸ்சிஸ் விட்டுச்சென்ற தடத்தை நிரப்புவதற்காகத்தான் இந்த முறை டெவன் கான்வேவை அணியில் எடுத்தார்கள். அவருக்கு முதல் போட்டியில் வாய்ப்பும் கொடுத்தார்கள். ஆனால், ஒரே போட்டியோடு ட்ராப்பும் செய்துவிட்டார்கள். தோனியிடமிருந்து இப்படியான முடிவுகளை எதிர்பார்க்கவே முடியாது. தலைமை மாற்றத்தினால் சிஎஸ்கேவின் அணித்தேர்வு வேறொரு ஸ்டைலை நோக்கி நகர்வதற்கான அறிகுறியாக கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.

டெவன் கான்வேக்கு பதில் உத்தப்பா ஓப்பனர் ஆக்கப்பட்டிருந்தார். கான்வேக்கு ஞாயப்படி வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்தான் என்றாலும் உத்தப்பா ஓப்பனராக்கப்பட்டதும் ஒரு நல்ல முடிவே. அவர் எவ்வளவுக்கு எவ்வளவு மேலே ஆடுகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்பாக ஆடக்கூடியவர். அதை இந்த போட்டியிலுமே நிரூபித்து காண்பித்கார்.

image

முதல் 3 போட்டிகளை தாண்டிய பிறகுதான் பேட்டை வீசுவேன் என்பதில் ருத்துராஜ் கெய்க்வாட் உறுதியாக இருந்து இந்த போட்டியிலும் சொதப்பினார். ஆனால், ருத்துராஜுக்கும் சேர்த்து வைத்து உத்தப்பா வெளுத்தெடுத்தார். பவர்ப்ளேயில் மட்டுமே சென்னை அணி 73 ரன்களை எடுத்திருந்தது. பேட்டிங்கில் சென்னை அணியை குறையே சொல்ல முடியாது. ஓப்பனராக ப்ரமோட் ஆன உத்தப்பா 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம் அடித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மொயீன் அலி அவரின் பணியை சரியாக செய்திருந்தார். எதிர்பார்ப்பே இல்லாத சிவம் துபே கூட நின்று ஆடி அசத்தியிருந்தார். அம்பத்தி ராயுடு நல்ல ஒத்துழைப்பு கொடுத்திருந்தார். கடைசியில் தோனியும் ஜடேஜாவும் நல்ல ஃபினிஷ் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 210 ஆக உயர்ந்தது. குறையே சொல்ல முடியாத பெர்ஃபார்மென்ஸ். வெற்றியையும் பெற்றுத்தரக்கூடிய டார்கெட் இது. ஆனாலும், சென்னை தோற்றிருக்கிறது? எனில் பிரச்னை எங்கே? பிரச்சனை எல்லாமே பந்துவீச்சில்தான்.

கடினமான சேஸிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அட்டகாசமாக அமைந்தது. கே.எல்.ராகுல் + டீகாக் ஓப்பனிங் கூட்டணி 11 ஓவர்களில் 99 ரன்களை எடுத்து மிரட்டியிருந்தது. டீகாக் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இந்த கூட்டணி பிரிந்த பிறகு உள்ளே வந்த எவின் லீவீஸ் கடைசி வரை நின்று ஆடியிருந்தார். 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம் அடித்திருந்தார். கடைசியில் கொஞ்சம் நெருக்கடியான சூழலில் வந்த இளம் வீரரான ஆயுஷ் பதோனியும் சிறப்பாக பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்து கடைசி ஓவரில் அணியை வெற்றிபெற வைத்தார்.

image

சென்னை அணி போட்டியை எங்கே தவறவிட்டது? சிவம் துபே 19 வது ஓவரிலா? ஆம், கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்ட சமயத்தில், ஆட்டம் சென்னைக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறதோ என தோன்றிய சமயத்தில், சிவம் துபே அந்த ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கி மொத்தமாக முடித்து வைத்தார். கடைசி ஓவரில் முகேஷ் சவுத்ரி இரண்டு ஒயிடுகளை வீசி ஒரு சிக்சரையும் கொடுத்து பரபரப்பே இன்றி லக்னோவை வெல்ல வைத்தார். இங்கே திருப்புமுனையாக அமைந்தது அந்த 19 வது ஓவர்தான். ஆனாலும் அந்த 19 வது ஓவர்தான் தோல்விக்கு காரணம், சிவம் துபேதான் தோல்விக்கு காரணம் என்பதை ஒத்துக்கொள்ளவே முடியாது. உண்மையான பிரச்சனை வேறொரு பக்கம் ஒளிந்திருக்கிறது.

அதுவரை ஒரு ஓவரை கூட வீசிடாத சிவம் துபேவுக்கு 19 வது ஓவர் கொடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? வேண்டி விரும்பி சிவம் துபேவால்தான் லக்னோவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் கொடுக்கப்பட்டதா? நிச்சயமாக இல்லை. சென்னைக்கு வேறு வழி இல்லை. அதுதான் உண்மை. சிவம் துபேவுக்கு ஓவர் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் உண்டானது அதனால் கொடுத்தார்கள்.

அந்த நிர்பந்தத்தை உண்டாக்கியது பவர்ப்ளே ஓவர்களே. தோல்விக்கு காரணமாக அமைந்திருப்பதும் அந்த பவர்ப்ளே ஓவர்களே. பவர்ப்ளேயான முதல் 6 ஓவர்களில் 55 ரன்களை கொடுத்து சென்னை அணி ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் இருந்தது.

image
சிவம் துபே மட்டும் அந்த 19 வது ஓவரில் 25 ரன்களை கொடுக்காமல் கொஞ்சம் கட்டுப்படுத்தியிருந்தால் கூட கடைசி பந்து வரை போட்டியை கொண்டு சென்றிருக்கலாம் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், சென்னையின் தோல்விக்கு இந்த 19 வது ஓவர் மட்டுமே காரணம் அல்ல. அதைத் தாண்டியும் சென்னை அணியில் பிரச்சனை இருக்கிறது.

குறிப்பாக, பவர்ப்ளேயில் சென்னை அணியின் பந்துவீச்சு ரொம்பவே சுமாராக இருக்கிறது. சென்னையின் பந்துவீச்சாளர்கள் கொல்கத்தாவிற்கு எதிரான கடந்த போட்டியிலும் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை கூட எடுத்திருக்கவில்லை. லக்னோவிற்கு எதிரான இந்த போட்டியிலும் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை கூட எடுத்திருக்கவில்லை.

கடந்த போட்டியில் ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் பவர்ப்ளேயில் பந்துவீசுயிருந்தனர். இந்த போட்டியில் துஷார் தேஷ்பாண்டேவும் முகேஷ் சௌத்ரியும் பவர்ப்ளேயில் ஓவர்களை வீசியிருந்தனர். இருவருமே அனுபவமற்றவர்கள். 5 ஓவர்களிலேயே 50 ரன்களுக்கு மேல் வாரி கொடுத்திருந்தனர். கே.எல்.ராகுல் மற்றும் டீகாக்கின் ஓப்பனிங் கூட்டணியை இவர்களால் முறிக்கவே முடியவில்லை. இதனால் பவர்ப்ளேயிலேயே ப்ராவோ அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

image

ப்ராவோ பவர்ப்ளேயில் பந்து வீசக்கூடியவர் இல்லை. மிடில் மற்றும் டெத் ஓவர்களிலேயே ப்ராவோ பிரதானமாக வீசுவார். அப்படியானவரை பவர்ப்ளேயில் வீச வைத்ததே, சென்னை அணிக்கு பவர்ப்ளேயில் கையறு நிலைக்கு சென்றதன் வெளிப்பாடே. ப்ராவோ எப்போது கடைசியாக பவர்ப்ளேயில் ஒரு ஓவரை வீசியிருக்கிறார் என தேடிப்பார்த்தோம். 2019 சீசனில் இதே கே.எல்.ராகுலுடைய பஞ்சாபுக்கு எதிரான போட்டியிலேயே கடைசியாக ப்ராவோ பவர்ப்ளேயில் ஒரு ஓவரை வீசியிருக்கிறார். அதன்பிறகு, கடந்த இரண்டு சீசன்களிலும் பவர்ப்ளேயில் ஒரு ஓவரை கூட ப்ராவோ வீசியிருக்கவில்லை. அந்த 2019 போட்டிக்கு பிறகு இப்போதுதான் முதல்முறையாக பவர்ப்ளேயில் ப்ராவோவின் கைக்கு பந்து சென்றது.

அனுபவமற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் செட்டில் ஆகாத வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கும் நிலையில் ப்ராவோ டெத் ஓவர்களில் இன்னும் வலுவாகவும் அதிக பொறுப்போடும் வீச வேண்டிய தேவை இருக்கிறது. இப்படியான சூழலில் பவர்ப்ளேயில் நியுபாலில் விக்கெட்டை வீழ்த்த வேண்டிய ரோலை செய்ய வேண்டிய பௌலர்கள் அதை செய்ய முடியாமல் போகையில் ப்ராவோ சீக்கிரமே ஓவர்களை வீச வேண்டியிருக்கிறது. இதனால், டெத் ஓவர்களில் துண்டு விழுகிறது.

image

கடந்த போட்டியிலும் பவர்ப்ளேயில் விக்கெட் விழாததால் 7 வது ஓவரிலேயே ப்ராவோ அறிமுகப்படுத்தப்பட்டிருப்பார். வேறு எந்த பௌலர்களும் விக்கெட் எடுக்காத சூழலில் அவர் மட்டுமே விக்கெட்களையும் வீழ்த்தியிருப்பார். ஆனால், டெத் ஓவர்கள்? கடைசி ஒன்றிரண்டு ஓவர்களை யார் வீசுவது என்கிற பிரச்சனை எழும். அதுதான் இந்த போட்டியிலும் எழுந்தது. ப்ராவோ, ப்ரெட்டோரியஸ் போன்ற டெத் ஓவரில் வீச வாய்ப்புள்ள வீரர்களை சீக்கிரமே பயன்படுத்தி அவர்களின் 4 ஓவர்களையும் முடிக்க வைத்தாயிற்று. அதற்கு காரணம் தொடக்க விக்கெட்டுகளை குறிப்பாக பவர்ப்ளேயில் யாருமே விக்கெட்டை வீழ்த்தவில்லை என்பதுதான். ப்ராவோவை இன்னும் கொஞ்சம் தள்ளி பயன்படுத்தலாம் என வைத்துக்கொண்டே இருந்தால் கடைசி ஓவரை அவர் வீசுவதற்கான வாய்ப்பே வராது. அதற்குள்ளேயே வாரி வழங்கி போட்டியை முடித்துவிடுவார்கள். பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்கும் இந்திய பௌலர்களும் வெளிநாட்டு பௌலர்களும் வந்தால் மட்டுமே பிரச்சனை தீரும்.

பவர்ப்ளேயில் சொதப்பிய பௌலர்கள் மட்டுமில்லை. கேப்டன் ஜடேஜாவின் பௌலிங் ரொட்டேஷனுமே பிரச்சனைதான். மொயீன் அலிக்கு இடையிலேயே கூடுதலாக ஒரு ஓவர் கொடுக்கப்பட்டிருந்தால் கூட, திடீரென 19 வது ஓவரில் சிவம் துபேவிடம் பந்தை கொடுப்பதற்கான தேவை ஏற்பட்டிருக்காது.

image

பவர்ப்ளேயில் சென்னை அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக தீபக் சஹார் இருந்தார். அவர் கடந்த 4 சீசன்களில் 58 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலும் பவர்ப்ளேயில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகள். பந்தை நன்றாக மூவ் செய்து பவர்ப்ளேயிலேயே முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னைக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார். இந்த சீசனில் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இரண்டாம் பாதி சீசனில்தான் வருவார் எனக்கூறப்படுகிறது. வெறும் 2 போட்டிகளில்தான் சென்னை ஆடி முடித்திருக்கிறது. அதற்குள்ளாகவே தீபக் சஹாரின் இல்லாமையை சென்னை அதிகமாக உணர தொடங்கிவிட்டது. அவருடைய இடத்தை நிரப்பும் வகையிலான ஒரு வீரரே அணியின் அவசர தேவை என்பதையே பவர்ப்ளேயில் ப்ராவோ வீசிய அந்த ஒரு ஓவர் சென்னைக்கு சொல்லும் மெசேஜாக கூட எடுத்துக்கொள்ளலாம்!

-உ. ஸ்ரீராம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments