ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை லக்னோ அணி 20 ரன் வித்தியாசத்தில் பிளே ஆஃப் வாய்ப்பை மேலும் நெருங்கியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின. லக்னோ அணி முதலில் பேட் செய்த நிலையில் கேப்டன் கேஎல் ராகுல் ஆறே ரன்களுக்கு ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய டிகாக் 46 ரன் எடுத்திருந்த நிலையில் சந்தீப் ஷர்மாவின் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதன் பின் பஞ்சாப் வீரர்கள் நேர்த்தியான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கால் எதிரணியை கலங்கடித்தனர். குருணால் பாண்டியா 7 ரன்னுக்கும் மார்க்ஸ் ஸ்டோனிஸ் ஒரு ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இளம் நம்பிக்கை நாயகன் ஆயுஷ் பதோனியும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். தீபக் ஹூடா மட்டும் சற்றே நிலைத்து 34 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதிக் கட்டத்தில் சமீராவும் மோஷின் கானும் சற்றே அதிரடி காட்டியதால் லக்னோ அணியின் ஸ்கோர் 150ஐ கடந்தது. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ரபாடா 4 ஓவர் வீசி 18 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து 154 ரன் என்ற எளிய வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி பேட் செய்யத் தொடங்கியது. ஆனால் லக்னோ வீரர்களும் சளைக்காமல் ஆடி பஞ்சாப் அணியை திணறடித்தனர். அதிரடி தொடக்க வீரர் ஷிகார் தவான் 5 ரன்னில் வெளியேறினார். இதன் பின் கேப்டன் மயங்க் அகர்வால் 25 ரன்னும் பேர்ஸ்டோ 32 ரன்னும் எடுத்து ஆட்டத்தில் உயிர்ப்பை ஏற்படுத்தினர். இவர்களுக்கு பின் வந்த பானுகா ராஜபக்ச, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேறியதால் பஞ்சாப் அணி இக்கட்டில் சிக்கியது.
கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 31 ரன் தேவைப்பட்டது. முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய ரிஷி தவான் அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அடுத்த 4 பந்துகளையும் ரன் கொடுக்காமல் வீசி தனது அணிக்கு ஆவேஷ் கான் வெற்றி தேடித்தந்தார். 20 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற லக்னோ அணி 12 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்கலாமே: ஐபிஎல்: சுனில் நரைன் புதிய சாதனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments