Advertisement

’ரோகித்தின் பிறந்தநாள் பரிசு’.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. மும்பைக்கு முதல் வெற்றி!

5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்று தனது முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2022 சீசனில் நேற்று நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தானின் தரப்பில் ஓப்பனர்களாக ஜோஸ் பட்லரும் தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். வழக்கமாக மும்பைக்கு எதிராக வெகுண்டெழுந்து ரன்களை விளாசும் பட்லர் இம்முறை நிதானமாக விளையாடத் துவக்கினார்.

டேனியல் சாம்ஸ் வீசிய ஓவரில் படிக்கல் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச ஸ்கோர் உயரத் துவங்கியது. ஆனால் ஹ்ரித்திக் சோகீன் வீசிய ஓவரில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார் படிக்கல். அதே ஓவரில் அடுத்து பட்லர் சில பவுண்டரிகளை விளாசினார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் இரு சிக்ஸர்களை விளாசிவிட்டு குமார் கார்த்திகேயா ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.

image

அடுத்து வந்த டேரில் மிட்செல் பட்லருடன் இணைந்து நிதானமாக விளையாடத் துவங்கினார். பட்லரும் அளவுக்கு அதிகமாக நிதானமாக விளையாட, தொடர்ந்து 4 ஓவர்களுக்கு ஒரு பவுண்டரி கூட ராஜஸ்தானால் அடிக்க இயலவில்லை. டேனியல் சாம்ஸ் ஓவரில் மீண்டும் பவுண்டரி விளாசி இயல்புக்கு திரும்பினார். ஹ்ரித்திக் வீசிய ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசி அரைசதம் கடந்த அவர், அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

ரியான் பராக் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, அடுத்து வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடத் துவங்கினார். பும்ரா ஓவரில் 2 பவுண்டரிகள் பறக்கவிட்டு அதகளம் காட்டிய அவர், மெரிடித் வீசிய கடைசி ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 158 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா, இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தது. நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் கைகோர்த்தார். ஆனால், 26 ரன்களுடன் 6-வது ஓவரில் இஷான் கிஷன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து திலக் வர்மா 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த சூர்யகுமார் - திலக் ஜோடி அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணிக்கு சற்றே நெருக்கடி உருவானது. 

ஒரு கட்டத்தில் 4 ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில், டிம் டேவிட் 17வது ஓவரில் ஒரு சிக்ஸர், 18வது ஓவரில் இரண்டி பவுண்டரிகள் அடித்து அழுத்தத்தை குறைத்தார். மறுபுறம் பொல்லார்டு மிக நிதானமாக விளையாடு ரசிகர்களுக்கு டென்ஷன் ஏற்றினார். 


image

கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. முதல் பந்திலேயே பொல்லார்ட் அவுட்டாக, பதற்றம் உருவானது. எனினும் அடுத்து வந்த டேனியல் சாம்ஸ் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். 19.2 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த சீசனில் மும்பை அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்த நிலையில், இந்த வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடினர். 

நேற்று ரோகித் சர்மாவின் பிறந்தநாள். ஆனால், அவர் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றி இருந்தார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள் பரிசை கொடுத்துள்ளது. 


இதையும் படிக்கலாம்: சிஎஸ்கேவின் திட்டம்தான் என்ன? தோனியை தாண்டி எப்போது யோசிக்கப்போகிறீர்கள்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments