ரோகித் சர்மா அவுட் ஆனதால் ஏமாற்றமடைந்த அவரது மனைவியை அஸ்வினின் மனைவி கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 159 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் இது மும்பை அணி பெற்ற முதல் வெற்றியாகும்
முன்னதாக இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அஸ்வின் பந்துவீச்சில் மிட்செல்லிடம் கேட்ச் கொடுத்து வெறும் 2 ரன்களில் அவுட் ஆனார். இதை பெவிலியனில் இருந்து பார்த்த ரோகித் சர்மா மனைவி ரித்திகா ஏமாற்றமடைந்தார். இதையடுத்து அவர் அருகே சென்ற அஸ்வின் மனைவி ப்ரீத்தி, ரித்திகாவை தேற்றும் வகையில் கட்டிபிடித்து ஆறுதல் சொன்னார். இந்த காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.
இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ''எங்களிடம் இருந்து உண்மையான ஆட்டம் இந்த போட்டியில்தான் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள் வைத்து கொண்டோம். அடுத்தடுத்த விக்கெட்டுகள் எடுத்து கொண்டே இருந்தால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும், அதை நாங்கள் இந்த போட்டியில் மிக சிறப்பாக செய்துள்ளோம். இந்த தொடரில் நாங்கள் பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், எந்த அணியும் எங்களை மிக இலகுவாக வீழ்த்திவிடவில்லை. சரியான ஆடும் லெவனை தேர்வு செய்ய பல மாற்றங்கள் செய்து பார்த்தோம், ஆனால் கடந்த போட்டிகளிலும் எதுவும் எங்களுக்கு பயனளிக்கவில்லை. பந்து வீச்சாளர்களை போன்று பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்தனர்'' என்று தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற முதல் போட்டியின் போது பெங்களூர் அணியில் விராட் கோலி அரைசதம் அடித்து இருந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் இது அவர் அடித்த முதல் அரைசதம் ஆகும். விராட் கோலி அரைசதம் அடித்த உடனே ஸ்டேடியத்தில் இருந்த அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆர்ப்பரித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவும் நேற்று வைரல் ஆனது. இருப்பினும், நேற்று பெங்களூர் அணி குஜராத் அணியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்: ’ரோகித்தின் பிறந்தநாள் பரிசு’.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. மும்பைக்கு முதல் வெற்றி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments