Advertisement

கான்வே பேட்டிங்கில் விளையாடிய “மின்வெட்டு”! 39 ரன்னில் 6 விக்கெட் இழந்தது சிஎஸ்கே!

வான்கடே மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டிஆர்எஸ் இல்லை என ஆட்டம் துவங்கும்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மின்வெட்டு சென்னை டாப் ஆர்டரை துவம்சம் செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கி விளையாடி வருகிறது சென்னை அணி. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங் தேர்வு செய்தார்.

வான்கடே மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சில நிமிடங்கள் தாமதமாகவே டாஸ் போடப்பட்டது. அதன் காரணமாக டிஆர்எஸ் இல்லை எனவும் ஆட்டம் துவங்கும்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மின்வெட்டு சென்னை டாப் ஆர்டரை துவம்சம் செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் கான்வே பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

சாம்ஸ் வீசிய 2வது பந்து கான்வேவின் பேட்டினை தாண்டிச் சென்று அவரது பேடில் பட்டது. மும்பை வீரர்கள் எல்பிடபுள்யூ கேட்டு கத்த, கள நடுவர் அவுட் என அறிவித்தார். கான்வே டிஆர்எஸ்(DRS) கோர முற்பட்டபோது, மின்வெட்டால் தற்போது அந்த வசதி இல்லை என நடுவர்கள் தெரிவித்தனர். கள நடுவர் அளித்த தீர்ப்பே இறுதியானதால் வேறு வழியின்றி பெவிலியன் திரும்பினார் டெவான் கான்வே!

இடையில் சற்று நேரம் நடுவரிடம் கான்வே மற்றும் கெய்க்வாட் முறையிட்டுக் கொண்டிந்தார். அப்போது நடுவர்களிடம் வந்த மும்பை அணி கேட்பன் ரோகித் சர்மா ஏதோ ஆவேசமாக பேசினார். அத்துடன், அருகில் நின்று கொண்டிருந்த கெய்க்வாட் இடமும் ஏதோ பேசினார். அவர் முறையிட்ட பின்னர்தான் கான்வே பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதையடுத்து மொயின் அலியுன் நடையைக் கட்ட உத்தப்பாவுக்கு வில்லனாக வந்தது மின்வெட்டால் தடைபட்ட டிஆர்எஸ். பும்ரா வீசிய பந்தில் உத்தப்பாவும் எல்.பி.டபுள்யூ விக்கெட் என அறிவிக்கப்பட்டார். நடுவருடன் உத்தப்பாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதிலும், டிஆர்எஸ் இல்லாததால் அவரும் வெளியேறினார். ஆனால் உத்தப்பா அவுட் ஆன பந்து சரியாக ஆஃப் ஸ்டம்பை பதம்பார்க்கும் வகையில் வீசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், கான்வேவிற்கு லெக் சைடில் மிஸ் ஆக வாய்ப்பு இருப்பதுபோல் தோன்றியது. ஒருவேளை டிஆர்எஸ் வாய்ப்பு இருந்திருந்தால் அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம். ஆட்டமும் இந்த நிலைக்கு வந்திருக்காது.

4 ஓவர்கள் முடிந்தபின் மின்வெட்டு பிரச்சினை சீராகி, டிஆர்எஸ் வசதி இனி உண்டு என அறிவிக்கப்பட்டது. தற்போது 7.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை மட்டுமே எடுத்து சென்னை அணி போராடி வருகிறது. டெத் ஓவர்களில் களமிறங்கும் ஃபினிஷர் தோனியும், பிராவோவும் சரிவில் இருந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments