சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே அமைத்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
கடந்த சீசனை சென்னை வென்றதற்கு ஓப்பனர்களான டூப்ளெஸ்சிஸும் ருத்துராஜூமே பிரதான காரணங்களாக இருந்தனர். ஆரஞ்சு தொப்பிக்கான அதிக ரன்களை அடித்தவர்களின் பட்டியலில் ருத்துராஜூம் டூப்ளெஸ்சிஸும் முதல் இரண்டு இடங்களில் இருந்தனர். சென்னை அணி கடந்த சீசனில் எடுத்திருந்த மொத்த ரன்களில் 50-60% ரன்களை இவர்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
இந்த சீசனில் இப்படி சென்னை அணிக்காக முழு பாரத்தையும் தங்கள் தலையில் ஏந்திக் கொள்ளும் அளவுக்கு ஒரு ஓப்பனிங் கூட்டணி அமையாமலே இருந்தது. டூப்ளெஸ்சிஸ் பெங்களூருவிற்கு சென்றுவிட்டார். ருத்துராஜ் ஃபார்ம் அவுட் ஆகியிருந்தார். இன்னொரு முனையில் சீரான ஓப்பனர் இல்லை. சென்னை அணியின் தோல்விகளுக்கு ஓப்பனர்கள் சிறப்பாக செயல்படாததும் மிக முக்கிய காரணியாக இருந்தது. இந்த சீசனில் கடந்த போட்டி வரைக்குமே சென்னை அணியின் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 28 ரன்கள்தான்.
ஆனால், நேற்றைக்கு சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நிலைமையே வேறு. ஓப்பனர்களாக இறங்கிய ருத்துராஜூம் கான்வேவும் இணைந்து 182 ரன்களை அடித்திருந்தனர். இந்த பார்ட்னர்ஷிப்தான் அணிக்கு தேவையான வெற்றியையும் தேடித் தந்தது. சென்னை அணியை கரை சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப் எப்படி உருவானது?
ருத்துராஜ் கெய்க்வாட் நேற்றைய போட்டியில் 99 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். உடனே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் 99 = 100 என ட்வீட் செய்திருந்தது. உண்மையிலேயே ருத்துராஜ் ஆடிய அந்த இன்னிங்ஸ் சதமாக மாறவில்லையெனினும் அதற்கு நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கலாம். ருத்துராஜ் கெய்க்வாட் இதுவரை ஐ.பி.எல் இல் ஆடிய இன்னிங்ஸ்களிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுவென்று கூட சொல்லலாம்.
ஏனெனில், இந்த இன்னிங்ஸை ருத்துராஜ் ஆடுவதற்கு முன் அவரை சுறி பல அழுத்தங்கள் இருந்தன. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சுமாராக ஆடி வருகிறார். குஜராத்திற்கு எதிராக ஒரு அரைசதம் அடித்திருந்தாலும் அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் ஏமாற்றமளிக்கும் பெர்ஃபார்மென்ஸ்களையே கொடுத்திருக்கிறார். 'One Season Wonder' என்கிற முத்திரையை ருத்துராஜின் மீது குத்துவதற்கு ரொம்பவே ஆயத்தமாக இருந்தனர். அணியுமே பயங்கரமான தோல்விகளை அடைந்திருக்கிறது. அணி எதிர்பார்க்காத சமயத்தில் பங்களிப்பை கொடுத்த தன்னால் அணி எதிர்பார்க்கும்போது பங்களிப்பை கொடுக்க முடியவில்லையே என்கிற அழுத்தமும் கூடவே இருந்தது. இதுபோக, டெவான் கான்வே எனும் புதிய ஓப்பனரையும் ருத்துராஜோடு இறக்கிவிட்டார்கள். இதையெல்லாம் சமாளித்து ருத்துராஜ் ஸ்பார்க் காட்டியதுதான் ஹைலைட்.
இந்தப் போட்டியை பொறுத்தவரைக்கும் ருத்துராஜ் தனக்காக மட்டுமல்லாமல் டெவான் கான்வேக்கும் சேர்த்து ஆட வேண்டிய தேவை இருந்தது. ஏனெனில், அணிக்குள் புதிதாக ருத்துராஜ் வந்தபோது இன்னொரு முனையில் சீனியராக நின்று கொண்டிருந்த டூப்ளெஸ்சிஸ் ருத்துராஜூக்காகவும் சேர்த்து ஆடியிருந்தார். ருத்துராஜின் மீது அழுத்தம் ஏறாமல் இருக்க அவர் தனக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டி டூப்ளெஸ்சிஸ் முதலில் ரிஸ்க் எடுத்து அட்டாக் செய்ய தொடங்கிவிடுவார். ருத்துராஜ் நின்று நிதானமாக செட்டில் ஆகி வெளுத்தெடுப்பார். அதற்கான சௌகரியத்தை ருத்துராஜூக்கு டூப்ளெஸ்சிஸ் ஏற்படுத்திக் கொடுப்பார். டூப்ளெஸ்சிஸ் ருத்துராஜூக்கு செய்ததை போல இப்போது கான்வேக்கு ருத்துராஜ் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில், கான்வேக்கு ஐ.பி.எல் இல் இதுதான் இரண்டாவது போட்டி.
இந்த சீசனின் முதல் போட்டியிலும் கான்வேயும் ருத்துராஜூம் தான் ஓப்பனராக வந்திருந்தனர். ஆனால், அந்த போட்டியில் ருத்துராஜ் டக் அவுட் ஆகியிருப்பார். அடுத்தடுத்து விக்கெட்டுகளும் வீழ்ந்திருக்கும். முதல் ஐ.பி.எல் போட்டியில் செட்டில் ஆகி களத்தை புரிந்துக்கொள்ளும் சௌகரியம் கான்வேக்கு கிடைக்கவே இல்லை. அவரும் அவசரகதியில் அவுட் ஆகி சென்றார்.
அந்த போட்டியில் நடந்ததை போன்ற தவறு இங்கே நடந்துவிடக்கூடாது என்பதில் ருத்துராஜ் தெளிவாக இருந்தார். க்ரீஸூக்குள் வந்தவுடனேயே, 'இது என்னுடைய சொந்த மைதானம். நான் இறக்கி ஆடி ஸ்கோரை முன் நகர்த்துகிறேன். உங்களுக்கு தேவையான நேரத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்' இப்படியாக ருத்துராஜ் கான்வேயிடம் கூறிவிடுகிறார்.
'Take your time' என சொன்னதோடு மட்டுமல்லாமல் கான்வே நின்று நிதானமாக செட்டில் ஆவதற்கான சௌகரியத்தையும் ருத்துராஜ் ஏற்படுத்திக் கொடுத்தார். முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் ருத்துராஜ் 21 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்களை எடுத்திருந்தார். அதேநேரத்தில், கான்வேயோ 15 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 100 க்கும் கீழ் இருந்தது.
மார்கோ யான்சன் டீப் ஸ்கொயரிலும் டீப் ஃபைன் லெக்கிலும் ஃபீல்டர்களை வைத்து வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை துணிச்சலாக எதிர்கொண்டு அந்த ஃபீல்டர்களிம் தலைக்கு மேலேயே ருத்துராஜ் சிக்சராக்கியிருந்தார்.
பவர்ப்ளே முடிந்த பிறகு ருத்துராஜ் இன்னும் அதிகமாக ரிஸ்க் எடுக்க தொடங்கினார். சன்ரைசர்ஸ் அணியின் அபாயகரமான பௌலராக உருவெடுத்திருக்கும் உம்ரான் மாலிக்கிற்கு கடுமையாக அட்டாக் செய்திருந்தார். உம்ரான் மாலிக் குஜராத்துக்கு எதிரான கடந்த போட்டியில்தான் இந்த சீசனின் மிகச்சிறந்த பௌலிங் பெர்ஃபார்மென்ஸை கொடுத்த்து மேன் ஆப் தி மேட்ச் விருதையும் வென்றுவிட்டு வந்திருக்கிறார். 150+ கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் உம்ரானை முதல் பந்திலேயே க்ரீஸை விட்டு இறங்கி வந்து ருத்துராஜ் அட்டாக் செய்தார். மிட் ஆஃப் ஃபீல்டரின் தலைக்கு மேல் அந்த பந்து சென்றிருந்தது. பவுண்டரி செல்லவில்லை. ஆனாலும் உம்ரானை எப்படி அட்டாக் செய்யப்போகிறேன் என்பதற்கான ஒரு சின்ன டீசரை இந்த ஷாட் மூலம் காட்டியிருந்தார்.
உம்ரான் மாலிக் பந்துவீசும்போது வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டிய ஃபீல்டர்கள் அத்தனை பேரையும் பேட்ஸ்மேனுக்கு பின்னாலே வைக்கும் வழக்கத்தையே வில்லியம்சன் எப்போதும் கடைபிடிப்பார். அதாவது, ஃபைன் லெக் மற்றும் தேர்டு மேனிலேயே அருகருகே நான்கு அல்லது ஐந்து ஃபீல்டர்களை நிறுத்தி வைத்திருப்பார். உம்ரான் மாலிக் 150+ கி.மீ வேகத்தில் வீசும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களுக்கான ஃபீல்ட் செட்டப் இது. உம்ரான் மாலிக்கின் அதிவேகம் பேட்ஸ்மேன்களை எட்ஜ் ஆக்கி அந்த டீப் ஃபீல்டர்களிடம் கேட்ச் ஆக வைக்கும் அல்லது ஷார்ட் பாலுக்கான ஃபீல்ட் செட்டப்பை வைத்துவிட்டு உம்ரான் வெறித்தனமான யார்க்கர்களை வீசி சர்ப்ரைஸ் கொடுத்து விக்கெட் எடுப்பார். இதுதான் சன்ரைசர்ஸின் திட்டம்.
தனக்கு பின்னால் நிற்க கூடிய அந்த 4 ஃபீல்டரிகளிடமும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, உம்ரான் மாலிக்கை இறங்கி வந்து ரிஸ்க் எடுத்து நேராக அவரின் தலைக்கு மேலேயே அடித்து ஆடினார். ரிஸ்க் எடுத்ததற்கான பலனையும் அனுபவித்தார். ஆளே இல்லாத ஏரியாக்களில் பவுண்டரிக்களும் சிக்சர்களும் சுதந்திரமாக பறந்தன. பவர்ப்ளே முடிந்தவுடன் உம்ரான் 3 ஓவர்களை தொடர்ந்து வீசியிருப்பார். உம்ரான் மாலிக் வீசிய இந்த 18 பந்துகளில் 13 பந்துகளை ருத்துராஜ்தான் எதிர்கொண்டிருந்தார். 13 பந்துகளில் 2 சிக்சர் 4 பவுண்டரிக்களோடு 33 ரன்களை உம்ரானுக்கு எதிராக மட்டுமே ருத்துராஜ் எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 200 க்கும். மேல்.
இருப்பதிலேயே அபாயகரமான பௌலரை ரிஸ்க் எடுத்து ருத்துராஜ் எதிர்கொண்டதால், இன்னொரு முனையில் நின்றிருந்த கான்வேக்கு பவர்ப்ளே முடிந்த பிறகுமே கூட எந்த அழுத்தமும் ஏற்படவில்லை. அணியின் ஒரே மெயின் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் ஃபீல்டிங்கின் போது விழுந்து வெளியேறிவிட்டதால் அவருக்கு பதில் பார்ட் டைமரான மார்க்ரமை ஓவர் வீச வைக்க வேண்டிய தேவை வில்லியம்சனுக்கு எழுந்தது.
எந்த திட்டமிடலும் திடீரென பந்தை கையில் வாங்கியபார்ட் டைமரான மார்க்ரமை அட்டாக் செய்தே கான்வே கொஞ்சம் டச்சுக்கு வர ஆரம்பித்தார். மார்க்ரமுக்கு எதிராக ஒரே ஸ்வீப் ஷாட்டாக ஆடி கொஞ்சம் வேகமெடுத்தார்.
10 ஓவர்கள் முடியும் போது ருத்துராஜ் 34 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். பவர்ப்ளே முடிவுக்கும் 10 வது ஓவர் முடிவுக்கும் இடையில் 13 பந்துகளை சந்தித்து 26 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 200. 10 ஓவர்கள் முடிவில் கான்வேயோ 26 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்தார். அதளபாதாளத்தில் கிடந்த அவரின் ஸ்ட்ரைக் ரேட் இப்போது ஒரு வழியாக 100 ஐ கடந்திருந்தது.
13 ஓவர்கள் முடிந்த சமயத்தில் ருத்துராஜ் 43 பந்துகளில் 78 ரன்களை அடித்திருந்தார். கான்வே 35 பந்துகளில் 38 ரன்களை எடுத்திருந்தார். மார்கோ யான்சன் வீசிய 15 வது ஓவரில் சிக்சர் அடித்து 39 பந்துகளில் கான்வே அரைசதத்தை எட்டினார். அரை சதத்தை கடந்த பிறகுதான் கான்வேயின் ஆட்டம் சூடுபிடித்தது. கடைசி 16 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் இருந்தது. கடைசியில் நாட் அவுட்டாக 55 பந்துகளில் 85 ரன்களை எடுத்தார். நிதானமாக நின்றார். செட்டில் ஆனார். பெரிய இன்னிங்ஸ் ஆடினார். ஆனால், அதற்கு அச்சாரமாக அமைந்தது ருத்துராஜ் ரிஸ்க் எடுத்து ஆடிய அந்த அட்டாக்கிங் இன்னிங்ஸே! ருத்துராஜ் அப்படி ஆடியதால்தான் கான்வேயால் 15 ஓவர் வரை ஸ்கோர்போர்டு அழுத்தமின்றி நின்று ஆட முடிந்தது.
ஆக, டூப்ளெஸ்சிஸ் ருத்துராஜூக்கு என்ன செய்தாரோ அதை நேற்று கான்வேக்கு ருத்துராஜ் வெற்றிகரமாக செய்து கொடுத்தார். அதனாலயே இந்த இன்னிங்ஸ் இன்னும் கூடுதல் சிறப்பானதாக மாறுகிறது. ருத்துராஜின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் எனும் பெருமையையும் பெறுகிறது.
-உ.ஸ்ரீராம்
இதையும் படிக்க: ஐபிஎல்- சச்சின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்வாட்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments