Advertisement

பும்ரான்னா ஃபயரு! - திமிறி எழுந்த ஷார்ட் பால்களும் திணறிப்போன கொல்கத்தாவும்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. 166 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் மும்பை 113 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆகியிருக்கிறது. மும்பை ஆடிய விதத்திற்கு 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என மும்பை ரசிகர்கள் சோக ஸ்டேட்டஸ்களை பறக்கவிட்டிருக்க வேண்டும். ஆனால், மும்பை ரசிகர்கள் சோகமாக இருப்பதை போன்றே தெரியவில்லை. காரணம், பும்ரா. அவர் செய்த தரமான சம்பவம் ரசிகர்களை கொஞ்சம் ஆறுதல்படுத்தியிருக்கிறது.

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று மும்பை அணி முதலில் பந்து வீசியிருந்தது. பும்ரா 4 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு மெய்டனோடு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ராவின் ஐ.பி.எல் கரியரிலேயே மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இதுதான். இந்த சீசனில் இதுவரை பும்ரா அவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருக்கவில்லை.

முதல் 10 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். மற்ற பௌலர்களும் சொதப்பிய நேரத்தில் சீனியரான பும்ராவும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் வீசாதது பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து வைத்து மொத்த வெறியையும் கொல்கத்தாவின் மீது இறக்கிவிட்டார்.

image

தொடக்கத்தில் கொல்கத்தா சிறப்பாகவே பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தது. 10 ஓவர்கள் முடிவில் 87-1 என்ற நல்ல நிலையிலேயே இருந்தனர். இப்படியே சென்றால் 200+ ஸ்கோரை எட்டிவிடுவார்கள் என்ற நிலையே இருந்தது. ஆனால், பும்ரா குறுக்கே புகுந்து கொல்கத்தாவை மொத்தமாக சரித்தார். கடைசி 10 ஓவர்களில் பும்ரா 3 ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரஸல், நிதிஷ் ராணா, கம்மின்ஸ், நரைன், செல்டன் ஜாக்சன் என பும்ரா வீழ்த்திய 5 விக்கெட்டுகளையுமே ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களிலேயே வீழ்த்தியிருந்தார். பும்ரா வீசிய 24 பந்துகளில் 12 பந்துகள் ஷார்ட் பிட்ச்சாக வீசியிருந்தார். இந்த 12 பந்துகளில் 5 பந்துகளில் விக்கெட்டுகளையும் வேட்டையாடினார். பும்ரா அதிகமாக ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை நம்பி சென்றதற்கு பின்னால் சரியான திட்டமிடல் இருந்தது.

image

இந்த சீசனில் ஷார்ட் பிட்ச் டெலிவரியில் அதிகமாக விக்கெட்டுகளை விட்ட அணி எது என ஒரு கணக்கெடுத்தால் அதில் கொல்கத்தா அணி நிச்சயமாக டாப் 3 க்குள் இருக்கும். அந்தளவுக்கு கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பால்களுக்கு அதிகமாக விக்கெட்டுகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டிக்கு முன்பாக கடைசியாக ஆடிய லக்னோவிற்கு எதிரான போட்டியிலும் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பால்களுக்கு கடுமையாக திணறியிருந்தனர்.

177 ரன்களை சேஸ் செய்த போது 15-வது ஓவரிலேயே 101 ரன்களுக்கு கொல்கத்தா ஆல் அவுட் ஆகியிருக்கும். கொல்கத்தா இழந்த 10 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகள் ஷார்ட் பாலில் வந்தவை. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரஸல் போன்ற முக்கியமான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டும் இதில் அடக்கம். ஆவேஷ் கான், மோஷின் கான், ஹோல்டர் என லக்னோவின் வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் ஷார்ட் பால்களை வலுவான ஆயுதமாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்.

image

பும்ராவுக்கான ப்ளூப்ரிண்ட் அந்த போட்டியில்தான் உருவாக்கப்பட்டது. அந்தப் போட்டியில் லக்னோ பௌலர்கள் கையாண்ட ஷார்ட் பால் யுக்தியைத்தான் இங்கேயும் கொல்கத்தாவிற்கு எதிராக பும்ரா கையாண்டார்.

140-145 கி.மீ வேகத்திற்கு குறையாமல் தொடர்ச்சியாக சீறிப்பாய்ந்தார். 15 வது ஓவரில் ரஸலுக்கு டீப் ஃபைன் லெக், டீப் தேர்டு மேன், டீப் ஸ்கொயர், டீப் பேக்வர்ட் பாய்ண்ட் என ஷார்ட் பிட்ச்சுக்கான ஒரு ஃபீல்ட் செட்டப்பை வைத்துவிட்டு சர்ப்ரைஸாக முதல் பந்தையே துல்லியமான யார்க்கராக இறக்கியிருப்பார். ரஸல் தட்டுத்தடுமாறியிருப்பார். அடுத்த பந்தே நேர் எதிராக நல்ல வேகத்தில் ஒரு ஷார்ட் பாலை வீச சரியாக கனெக்ட் ஆகாமல் ஒரு ஷாட்டை ஆடி லாங் ஆனில் பொல்லார்டிடம் ரஸல் கேட்ச் ஆகியிருப்பார்.

அதே ஓவரில் நிதிஷ் ராணாவுக்கு ஒரு Unplayable லெந்தில் ஷார்ட் பாலை வீசி எட்ஜ் ஆக்கி அவரின் விக்கெட்டை தூக்கியிருப்பார்.

image

18 வது ஓவரிலும் இதே பாணிதான். கம்மின்ஸ், செல்டன் ஜாக்சன், நரைன் என வீழ்த்திய 3 விக்கெட்டுகளுமே ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களில் வந்தவை. ஆக, மொத்தமாக பும்ரா வீழ்த்திய 5 விக்கெட்டுகளுமே ஒரே ஷார்ட் லெந்தில் பிட்ச்சானவை. பும்ராவின் ஷார்ட் லெந்த் கொல்கத்தாவையும் அவர்கள் எதிர்பார்த்த ஸ்கோரை விட ரொம்பவே ஷார்ட்டாக முடித்துவிட்டது. 165 ரன்களை மட்டுமே கொல்கத்தா அணியால் எடுக்க முடிந்தது.

கடைசி ஓவரில் ரிங்கு சிங்கின் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தியிருந்தால் கொல்கத்தா ஆல் அவுட் ஆகியிருக்கும். பும்ராவும் ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசி முடித்திருப்பார். ஆனால், அது நிகழவில்லை. இருந்தாலும் இதுவும் ஒரு வெறித்தனமான ஸ்பெல்தான். பும்ராவின் கரியரிலேயே மிகச்சிறந்த ஸ்பெல் அல்லவா இது!

-உ.ஸ்ரீராம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments