டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 5-வது இடத்திற்கு பதிலாக, 3-வது அல்லது 4-வது இடத்தில்தான் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 7 (11) ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்ததாக எதிர்பாராத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3-வது இடத்தில் களமிறங்கினார். வழக்கமாக அந்த அணியில் 3 -வது விக்கெட்டுக்கு கேப்டன் சாஞ்சு சாம்சன் களமிறங்குவார். இருப்பினும் அற்புதமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த அஸ்வின் 38 பந்துகளில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வினின் முதல் அரைசதம் இதுவாகும்.
இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 (19) ரன்களில் அவுட்டாகி வெளியேறியபோது அப்போதும் இறங்காத சாஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல்லை அனுப்பினர். அவரும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் பங்கிற்கு 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 6 (4) ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலக்கை விரட்டிய டெல்லி அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து 19வது ஓவரில் வெற்றி பெற்றது. .
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வதற்குப் பதிலாக, 3-வது அல்லது 4-வது இடத்தில்தான் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், "நீங்கள் 4-வது விக்கெட் என்றால், 4-வது 3-வது இடத்தில்தான் இறங்குவதுதான் சரியானதாக இருக்கும். அப்போதுதான் பொறுப்புடன் விளையாடியிருக்க முடியும். இவ்வளவு பெரிய, முக்கியமான போட்டியில் இப்போது என்ன நடந்திருக்கிறது எனப் பாருங்கள். இதனால் சாம்சன் 6 ரன்களில் வெளியேறியிருக்கிறார். ஒரு முக்கியமான போட்டியில் கேப்டன்தான் அதிகளவு பேட்டிங் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்'' என்று கூறினார்.
தோல்விக்குப் பிறகு பேட்டி அளித்துள்ள ராஜஸ்தான் கேப்டன் சாம்சன், ''நாங்கள் 15 ரன்கள் குறைவாக இருந்தோம். இன்னும் கொஞ்சம் அதிக ரன்களை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். அதேபோல் மிடில் ஓவர்களில் கொஞ்சம் விக்கெட்களை எடுத்திருக்க வேண்டும். சில கேட்ச்களை தவறவிட்டோம். இது உண்மையில் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் நாங்கள் நிச்சயம் வலிமையோடு திரும்பி வருவோம்” எனக் கூறினார்.
ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால்கூட அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிக்கலாம்: அஸ்வின் அரைசதம் வீண் - ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments