Advertisement

பள்ளியளவிலான கிரிக்கெட்டிலிருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன் - தோனி பேச்சு

"பள்ளியளவிலான கிரிக்கெட்டிலிருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன்; திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பொறுப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு இருக்கிறது" என திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க விழாவில் பங்கேற்ற தோனி பேசியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ஆம் ஆண்டு (வெள்ளி விழா) நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், சதுரங்கம், கால்பந்து, தடகளம், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார்.

image

பின்னர் மேடையில் ஆங்கிலத்தில் பேசிய டோனி, "மாவட்ட கிரிக்கெட் சங்க கூட்டத்தில் நான் பங்கேற்பது இதுதான் முதன்முறை. சென்னையில் இருந்தபடி எனது ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன். சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன். பள்ளியளவிலான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவிலான போட்டிகள் மூலம் பல வீரர்கள் உருவாகியுள்ளனர்.

மாவட்டளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாயப்பு கிடைக்கும். திறமையான வீர்ர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும். 25 வது விழாவை கொண்டாடும் இந்த சங்கம், 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாட வேண்டும். ரஞ்சி, ஐபிஎல், இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments