இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்த 4-ஆவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றும். ஒருவேளை இந்தியா வெற்றிப்பெற்றால் இந்தத் தொடர் சமநிலை பெறும். அதனால் இந்தப் போட்டியில் வெற்றிப்பெற இரு அணிகளும் போராடும். இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தாலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்றது. இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட் கடந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியது அணிக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
மேலும் இஷான் கிஷனும் சிறப்பாகவே விளையாடி வருகிறார். ஹர்திக் பாண்ட்யாவும், தினேஷ் கார்த்திக்கும் ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றார்போல விளையாடி வருகின்றனர். ஆனால் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் பாஃர்ம் மட்டுமே கவலைக்குறியதாக இருக்கிறது. இந்திய அணியின் பீல்டிங்கும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கிறது. பவுலிங்கை பொறுத்தவரை சுழற்பந்துவீச்சாளர் சஹால் கடந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவேஷ் கானும், அக்ஸர் படேலும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் வலுவாகவே இருக்கிறது. ஆனால் கடந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கில் சொதப்பியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏகப்பட்ட கேட்சுகளை தவறவிட்டதன் காரணமாகவே அவர்களின் வெற்றியும் பறிக்கப்பட்டது. அதனால் இந்தப் போட்டியில் அந்தக் குறையை நீக்கி தென் ஆப்பிரிக்கா போராடும் என தெரிகிறது.
இந்தப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவனில் மாற்றம் ஏதும் இருக்காது என்றே தெரிகிறது. ராஜ்கோட்டில் வியாழக்கிழமை நல்ல மழை பெய்துள்ளது. அதனால் ராஜ்கோட்டில் இன்றும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments