ஊக்கமருந்து தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் முறைகேடு செய்ததால், ஒலிம்பிக் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரஷ்யா பங்கேற்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 2019 இல் தடைவிதித்தது. இதன் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய நாட்டு வீரர்கள் அந்நாட்டு கொடி இல்லாமல் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
ஊக்கமருந்து தொடர்பான அறிக்கையில் முறைகேடு செய்ததாக ரஷ்யா மீது புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. ரஷ்யா முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரஷ்யா, எந்த ஒரு சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. தற்போதைய டோக்கியோ ஒலிம்பிக், 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றில் ரஷ்யா பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் அப்போட்டிகளின் போது ரஷ்ய நாட்டுக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஊக்கமருந்து சோதனையில் தேர்ச்சி அடையும் பட்சத்தில், ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வீரர்கள், வீராங்கனைகளின் நலன் கருதி அவர்களை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதித்துள்ளனர். அதனால் அவர்கள் ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி(ஆர்ஓசி) சார்பில் பங்கேற்று உள்ளனர்.
அதனால் அவர்கள் ரஷ்யாவின் தேசிய கொடிக்கு பதிலாக, ரஷ்யன் ஒலிம்பிக் சங்கத்தின் கொடியை ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்றனர். அதேபோல் அவர்கள் வெற்றிப் பெறும்போது அரங்கில் ரஷ்ய கொடியை ஏற்றுவதோ, ரஷ்ய தேசிய கீதமோ ஒலிப்பதோ இருக்காது. மேலும் அவர்கள் வெல்லும் பதக்கங்கள் ரஷ்ய நாட்டின் கணக்கில் வராது. கடந்தமுறை பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா 19 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.
இந்தமுறை கைப்பந்து, கூடைப்பந்து, ஹேண்ட்பால் குழு ஆட்டங்களிலும்,தடகளம், குத்துச்சண்டை, வாள் வீச்சு, ஜிம்னாஸ்டிக் என தனிநபர் பிரிவுகளிலும் மொத்தம் 337 ரஷ்யர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments