Advertisement

‘எங்கள் உடை, எங்கள் உரிமை’ - கவர்ச்சியான உடைக்கு எதிராக குரல் எழுப்பும் வீராங்கனைகள்

விளையாட்டு களத்தில் வீராங்கனைகளின் சீருடைக்கான டிரஸ் கோட் என்பது காலம் காலமாக ஒரே விதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் விளையாட்டு திறனுக்காக போற்றப்பட வேண்டிய வீராங்கனைகள் போகப் பொருளாக பார்க்கப்படுவதாக பெண்ணிய சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு. 

image

இந்நிலையில், அண்மைய காலமாக இந்த உடை விவகாரத்தில் தங்களது உரிமையை நிலை நாட்டும் வகையில் சில முரண்களை முன்னெடுத்துள்ளனர் சர்வதேச அளவில் விளையாடும் வீராங்கனைகள். அது தற்போது ஒலிம்பிக் அரங்கிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 

குறிப்பாக ஜிம்னாஸ்டிக் மாதிரியான விளையாட்டுகளில் பங்கேற்கும் வீராங்கனைகள் இந்த உடை கட்டுப்பாட்டை உடைக்கும் நோக்கில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்காக அவர்கள் வழக்கமான உடையை உடுத்தாமல் தங்களுக்கு சவுகரியமான உடையை உடுத்தி விளையாடி, தங்களது திறனை நிரூபித்து வருகிறார்கள். 

image

பிகினிக்கு மாற்றாக ஷார்ட்ஸ் அணிந்தமைக்காக அபாராதம்! - பல்கேரியாவில் நடைபெற்ற ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே நாட்டின் மகளிர் கடற்கரை ஹேண்ட்பால் அணி முறைப்படி அணிந்து விளையாட வேண்டிய பிகினி உடைக்கு மாற்றாக ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு விளையாடியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக போட்டியை நடத்தும் அமைப்பிடம் முறைப்படி கோரிக்கை வைத்திருந்தனர் அந்த அணியின் வீராங்கனைகள். அதில் தாங்கள் பிகினிக்கு மாற்றாக ஷார்ட்ஸ் அணிய விரும்புவதாக சொல்லி இருந்தனர். அவர்களது கோரிக்கை ஏற்கப்படாத சூழலில் அதே தொடரில் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடினர். அதற்காக ஐரோப்பிய ஹேண்ட்பால் கூட்டமைப்பு அபராதம் விதித்திருந்தது. இந்த அபாராத தொகையை வீராங்கனைகளின் சார்பாக நார்வே விளையாட்டு கூட்டமைப்பு செலுத்தும் என அவர்களது உடை உரிமைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. 

image

ஜெர்மனி வீராங்கனைகளின் எதிர்ப்பு குரல்! - உடலை வளைத்து, நெளித்து ஆடும் விளையாட்டான ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பங்கேற்று விளையாடும் வீராங்கனைகளுக்கு மரபு ரீதியான ஆடை கட்டுப்பாடுகள் உண்டு. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாரம்பரிய உடை கவர்ச்சியாக இருப்பதாகவும், தங்களது விளையாட்டு திறனை நிரூபிக்கவே விளையாட வந்திருப்பதாகவும் சொல்லி உடலை முழுவதுமாக மறைக்கின்ற ஆடைகளை அணிந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீராங்கனைகள். இதற்கு அந்நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பும் ஆதரவு கொடுத்துள்ளது. 

முதலில் ஐரோப்பிய ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் தொடரில் இந்த டிரஸ் கோடினை அவர்கள் புறம் தள்ளியிருந்தனர். தற்போது அதன் தொடர்ச்சியாக டோக்கியோ ஒலிம்பிக்கிலும் உடலை முழுவமதுமாக மறைக்கின்ற FULL BODY SUIT உடையை அணிந்து விளையாடி வருகின்றனர். 

இனி தான் ஆரம்பம்! - ஜெர்மன் மற்றும் நார்வே வீராங்கனைகள் உடை விவகாரத்தில் தங்களது குரலை உரக்க ஒலிக்க செய்திருப்பது வெறும் ஆரம்பம் தான். இனி வரும் நாட்களில் இவர்களது வழியை பின்பற்றி சர்வதேச அளவில் விளையாடி வரும் வீராங்கனைகள் உடை அணியும் விவகாரத்தில் தங்களது விருப்பம் மற்றும் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வரலாம். அதன் மூலம் மாற்றம் உண்டாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments