Advertisement

மீராபாய் சானுவின் வெற்றி நிமிடங்களை மறு உருவாக்கம் செய்து அசத்தி கவனம் ஈர்க்கும் சிறுமி

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுத் தந்த மீராபாய் சானுவின் போட்டி நொடிகளை மறு உருவாக்கம் செய்து அசத்தி, மீராபாய் சானுவின் கவனத்தை ஈர்த்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சிறுமி.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்திருந்தார் மீராபாய் சானு. பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றதை தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மீராபாய் சானு பளு தூக்கிய வீடியோக்கள், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அப்படியான ஒரு வீடியோவை அப்படியே மறு உருவாக்கம் செய்து அசத்தியுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சிறுமி.

இக்குழந்தையின் வீடியோவை தமிழ்நாட்டின் வேலூரை சேர்ந்த பளுதூக்கும் வீரரான சதிஷ் சிவலிங்கத்தின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சதீஷ், 2014 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக்கொண்டு தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 2016ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துக்கொண்டிருந்தார் அவர். குழந்தையின் அந்த மறு உருவாக்க வீடியோவை சதிஷ் சிவலிங்கம் ட்விட்டரில் ‘ஜூனியர் மீராபாய் சானு - இதற்கு பெயர்தான் இன்ஸ்பிரேஷன்’ என பகிர்ந்திருந்தார்.

image

இந்த வீடியோவை பார்த்த மீராபாய் சானு, ‘க்யூட்டாக இருக்கிறது. எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது’ என ரீட்வீட் செய்துளார். குழந்தையின் க்யூட்டான அந்த வீடியோவை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதில் கூடுதல் சுவாரஸ்யமொன்றும் உள்ளது. அது மீராபாய் சானுவும் தனது சிறுவயதில் தனக்கு முந்தைய தலைமுறையை சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனையொருவரை டிவியில் பார்த்து இன்ஸ்பைர் ஆனவர்தான். 

தொடர்புடைய செய்தி: ஒலிம்பிக் பளுதூக்குதலில் சாதனை வெற்றி.. குவியும் வாழ்த்துகள் - யார் இந்த மீராபாய் சானு?

மீராபாய், நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது (2004 ம் ஆண்டு) விடுமுறை நாளொன்றில், டிவி ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒலிம்பிக் போட்டியில் குஞ்சரணி தேவி என்ற வீராங்கனையொருவர் பளு தூக்குதலில் அசத்திக் கொண்டிருந்தார். அதை பார்த்து தான் மீராபாய் சானுவுக்கு பளு தூக்குதலில் ஆர்வம் வந்ததாக அவரின் தாயார் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

மேலும் டிவியில் அந்தப் போட்டி முடிந்தவுடன், ‘இந்தியாவிற்கு நானும் பளு தூக்குதலில் பதக்கம் வென்று தருவேன்’ என்று ஆர்வத்தோடு வீட்டு வாசலில் கிடந்த நீளமான மூங்கில் கோளை தலைக்கு மேல் தூக்கி மீராபாய் விளையாடியதாகவும் அவரின் தாய் கூறியுள்ளார். அந்தக் குட்டிப்பெண் மீராபாய் சானு இன்று இன்னொரு சிறுமிக்கு இன்ஸ்பிரேஷனாகியுள்ளார். இந்தக்குட்டிபெண்ணும் வருங்காலத்தில் பல பெண் குழந்தைக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாற, நாமும் வாழ்த்து கூறுவோம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments