Advertisement

இந்தியாவுக்கு முதல் பதக்கம் : பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று மீராபாய் சானு சாதனை

ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார் மீராபாய். 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார் சீன வீரர் ஹோ சி ஹூய். இதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தை பிடித்தார் மீராபாய். 2000ஆவது ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார் கர்ணம் மல்லேஸ்வரி. ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது.

யார் இந்த மீராபாய்?

இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் தான் (Nongpok Kakching) மீராபாய் சானு பிறந்து, வளர்ந்த கிராமம். நிரந்தர வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலையை செய்து வந்துள்ளனர் அவரது பெற்றோர். அதே கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியில் ஆரம்ப கல்வியை படித்துள்ளார் சானு.

ஒன்பது வயதான மீராபாய் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது விடுமுறை நாளில் டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்து கொண்டிருந்தார். அதில் குஞ்சரணி தேவி பளு தூக்குதலில் 2004 ஒலிம்பிக்கில் அசத்திக் கொண்டிருந்தார். அதை பார்த்து தான் அவருக்கு பளு தூக்குதலில் ஆர்வம் வந்தது என மீராபாய் சானுவின் தாயார் தெரிவிக்கிறார். மேலும், அந்த போட்டி முடிந்தவுடன் இந்தியாவிற்கு தான் பளு தூக்குதலில் பதக்கம் வென்று தருவேன் என்ற ஆர்வத்தோடு வீட்டு வாசலில் கிடந்த நீளமான மூங்கில் கோளை தலைக்கு மேல் தூக்கி விளையாடியதகவும் கூறுகிறார்.

தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்திற்கு சென்று உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மீராபாய். கூடுதல் பயிற்சிக்காக தங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் இருந்த பளு தூக்கும் பயிற்சி மையத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மீராபாய். விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் தங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்க பழம், பால், சத்து மாவு முதலியவற்றை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் வறுமையால் மீராபாய் பால் கூட வாங்கி பருக முடியாத சூழல். ஆனால் பயிற்சியாளரிடம் அதை கூட மறைத்துள்ளார் அவர். வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தனது முத்திரையை பதித்தார். 2013ல் ஜுனியர் பிரிவில் நாட்டின் சிறந்த வெயிட் லிப்டர் என்ற பட்டத்தை வென்றார் மீராபாய்.

image

பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் தங்கி பயிற்சி பெரும் வாய்ப்பை பெற்றார் மீராபாய். அதற்கு அவரது பெற்றோர் நோ சொல்ல '2016 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நான் பங்கு பெறுவேன். அந்த வாய்ப்பை இழந்தால் வீட்டுக்கே திரும்பி விடுகிறேன்' என சபதம் போட்டுவிட்டு மூட்டை முடிச்சுகளோடு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.

அங்கு தன்னுடைய குஞ்சரணி தேவிதான் அவருக்கு பயிற்சியாளர். அதன் மூலம் தேசிய போட்டிகளில் அசத்தி 2014 ல் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு பெற்றார். அதில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றிருந்தார் மீராபாய். அந்த வெற்றியின் மூலமாக 2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் அதில் 48 கிலோ எடைப்பிரிவில் ஆறாது இடம் பிடித்தார்.

அமெரிக்காவில் நடந்த 2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் 194 கிலோவை அசால்டாக தூக்கி நிறுத்தி தங்கத்தை வென்றார் மீராபாய்.

image

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது எனது அடுத்த இலக்கு எனக் கூறிய மீராபாய்க்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 2020இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் 49 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மீராபாய்க்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments