Advertisement

இதுவல்லவா பெருந்தன்மை! தங்கத்தை பகிர்ந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்த வீரர்கள் - வீடியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கத்தை இரண்டு வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனை அந்த இரண்டு வீரர்களும் ஒற்றுமையுடன் கொண்டாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டி நேற்று நடந்தது. இதில் கத்தார் நாட்டு வீரர் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி, பெலாரஸ் வீரர் மாக்சிம் நெடாசேகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் முதாஸ் பார்ஷிம், கியான்மார்கோ இருவரும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டி ஒரே புள்ளிகளைப் பெற்றனர். 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதற்கு இருவரும் 3 முயற்சிகள் செய்தும் அதில் இருவரும் 3 தவறுகளைச் செய்தனர். இதையடுத்து, இறுதியான வெற்றியாளரைக் கண்டுபிடிக்க கடைசியாக தாண்டுதலை நடத்த நடுவர் முடிவு செய்தார்.

image

அப்போது, ஒலிம்பிக் போட்டி நடுவரிடம் பார்ஷிம், "இரு தங்கப்தக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா, இருவரும் தங்கத்தை ஷேர் செய்ய முடியுமா" எனக் கேட்டார். இதற்கு நடுவரும் தங்கத்தைப் பகிர்ந்து அளிக்க சம்மதம் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் பார்ஷிம், கியான்மார்கோவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு நட்புடன் துள்ளி குதிக்கும் வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. போட்டியாக இருந்தாலும் விளையாட்டு வீரர்களுக்கு உரிதான பெருந்தன்மையும் உத்வேகமும் அந்த வீடியோவில் காணப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும், ரியோவில் வெள்ளியும் வென்றவர் பார்ஷிம். ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டில் காலில் ஏற்பட்ட காயத்தால் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. அந்த நேரத்தில் பார்ஷிம் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடவருவதற்கு கியான்மார்கோ துணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments