Advertisement

இந்திய மகளிர் ஹாக்கி: வலிகள் நிறைந்த வீர மங்கைகளின் வாழ்க்கை

உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி வீர மங்கைகளின் வாழ்க்கை வலி நிறைந்தது. அதனை சற்றே திருப்பிப் பார்ப்போம்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிய வரலாறு படைத்துள்ளது இந்திய மகளிர் ஹாக்கி அணி. இவ்வளவு சந்தோஷத்துக்குப் பின்னணியில் ஒவ்வொரு வீராங்கனைகளின் பங்களிப்பு அளப்பரியது. சமூகத்தின் அடித்தட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் வலி, வேதனைகளை சுமந்து தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர்.

அனைத்துக்கும் முத்தாய்ப்பாக இருப்பவர் அணியின் கேப்டன் ராணி ராம்பால். இவர் உடைந்த ஹாக்கி ஸ்டிக்குகளை வைத்து பயிற்சி மேற்கொண்டவர். அவரது தாய் வீட்டு வேலை செய்தவர். தந்தை தினம் 80 ரூபாய் சம்பாதிக்கும் வண்டி இழுக்கும் தொழிலாளியாக இருந்தவர். இத்தகைய பின்னணியில் இருந்து வந்த ராணி ராம்பால் இவ்வளவு உயரம் தொட்டுள்ளார்.

ஒடிஷாவை சேர்ந்த தீப் கிரேஸ் எக்காவின் குடும்பம் ஹாக்கி பாரம்பரியம் கொண்டது. ஆனாலும் அவர் ஹாக்கி மட்டையை எடுத்தபோது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதையெல்லாம் கடந்துதான் தீப் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

அணியிலேயே அதிக அனுபவம் கொண்ட மணிப்பூரை சேர்ந்த சுசிலா சானுவின் தந்தை ஒரு ஓட்டுநர். இவர் மாநில அணிக்காக தேர்வு செய்யப்படாததால் மன உளைச்சலில் கிட்டத்தட்ட ஹாக்கியை விட்டு வெளியேறிய நிலையில், அவரது சீனியர்களின் உந்துதலால் மீண்டும் களத்திற்கு வந்தார்.

இன்றையை போட்டியின் நட்சத்திரமான குர்ஜித் கவுர் அமிர்தசரஸில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கிராமத்தில் இருந்தவரை குர்ஜித் கவுருக்கு ஹாக்கி என்றால் என்னவென்றே தெரியாது. கிராமத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சென்று அங்கு தங்கிப் படிக்கும்போதுதான் அவருக்கு ஹாக்கி அறிமுகம். நாள் முழுவதும் பெண்கள் ஹாக்கி விளையாடுவதை உன்னிப்பாக கவனித்த குர்ஜித் கவுருக்கு பின்னாளில் அதன் மீது அதீத பற்று உருவானது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில் பெரும் பங்கு கொண்ட கோல் கீப்பர் சவிதா புனியா, ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வாரத்தில் ஆறு நாட்கள் ஹாக்கி பயிற்சி பெற்றவர். அவருக்கு முன்பு அவருடைய குடும்பத்தில் யாரும் விளையாட்டை தொழில் முறையாக தேர்வு செய்தது கிடையாது. முதல் முறையாக ஹாக்கியை தேர்வு செய்த சவிதா தற்போது திறமையான மங்கையாக ஜொலிக்கிறார். இதுபோல் அணியில் உள்ள பலரும் கடினமான சூழலுக்கு மத்தியில் தங்களை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments