Advertisement

"தோனி ஒரு புயல் போல அறிமுகமானார்; அவர் வரும்போதே தெரிந்துவிட்டது" - தினேஷ் கார்த்திக்

தோனி என்னுடைய பேட்டிங்கை பாராட்டி ஊக்குவித்தார் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தற்போது 2 மாதக் காலமாக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார். இம்முறை விளையாடுவதற்காக இல்லாமல் கிரிக்கெட் வர்ணனை செய்துக்கொண்டு இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்து சென்றவர் அங்கிருந்தபடி தொலைக்காட்சியில் ஆங்கில வர்ணனை செய்துக்கொண்டு இருக்கிறார்.

image

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் "நான் எப்போதும் ஒரே இடத்தில் தேங்கியிருந்தது இல்லை. அடுத்தடுத்து என்ன என்று நகர்ந்துக்கொண்டே இருப்பேன். இந்திய அணிக்காக தொடக்க வீரராகவும், மிடில் ஆர்டரிலும் விளையாட எனக்கு வாய்ப்பு இருந்தது. தோனி கூட என்னிடம் 'நீங்கள் மிகவும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் உங்களால் தொடக்க வீரராக விளையாட முடியும்' என ஊக்கமளித்தார். ராகுல் டிராவிடும் என்னிடம் இதேதான் கூறுவார்" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "தோனி ஒரு புயல் போல அறிமுகமானார். ஒட்டுமொத்த நாட்டையும் தன் பக்கம் இழுத்தார். அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது, இந்திய அணியில் எனக்கான கதவு மூடப்பட்டது என்று. சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் எப்போதாவதுதான் அமைவார்கள். அப்படி இந்தியாவுக்கு சையத் கிர்மானி, கிரண் மோரே ஆகியோர் அமைந்தனர். அதன் பின்பு தோனிதான் அமைந்தார். தோனி ஒரு தலைமுறையின் வீரராக உயர்ந்தார். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அணிக்கு கிடைத்துவிட்டால் அவர் அந்த அணியில் 10 - 12 ஆண்டுகள் இருப்பார்" என்றார் தினேஷ் கார்த்திக்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments