Advertisement

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக் தடகளத்தில் முதல் தங்கம் வென்று சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

இவர் முதல் சுற்றில் 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நிலையில், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார், மூன்றாவது சுற்றில் 76.79 மீட்டர் தூரத்துக்கும் எறிந்தார். 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவு போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது நீரஜ் சோப்ரா, தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து, முதல் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். தற்போது நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 87.58 மீட்டர் தூரம் எறிந்த வீரர் நீர்ஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது 

யார் இந்த நீரஜ்?

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் ஒருவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தார். ஒரே இரவில் தடகள விளையாட்டு உலகில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டினார். அவர்தான் நீரஜ் சோப்ரா.

image

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1997இல் பிறந்தவர். அவருக்கு தற்போது 23 வயது. பள்ளிப் பருவத்தில் பருமனான உடல் வாகை கொண்டிருந்திருக்கிறார் அவர். 12 வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்திருக்கிறார். அந்த எடையை குறைக்கும் நோக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி உள்ளார். அது நாளடைவில் அவரை தொழில்முறை வீரராக உருவாக்கி உள்ளது.

தொடக்கத்தில் உள்ளூர் அளவில் அசத்தியவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2016-இல் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் தனது பதக்க வேட்டையை தொடங்கினார். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த், ஆசிய விளையாட்டுகள் மாதிரியான முக்கிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இடையில் சில மாதங்கள் காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தார்.

image

“எப்போதுமே அனைவரும் பதக்கம் வெல்ல வேண்டும் என மட்டுமே சிந்திக்கிறார்கள். நான் விளையாடும்போது எனது ஆட்டத்தை சரியாக விளையாடி துல்லியமாக ஈட்டியை எறிய வேண்டும் என நினைப்பேன். நான் எனது நோக்கத்தை அடையும்போது அதில் கிடைக்கும் வெற்றிக்கான போனஸ்தான் பதக்கங்கள்” என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் நீரஜ்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments