Advertisement

ஒலிம்பிக்: தமிழகத்தில் விளையாட்டுத்துறைக்கான திட்டமிடல் என்ன? – அமைச்சர் பேட்டி

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றது, நாட்டையே உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  தமிழகத்தில் விளையாட்டுத்துறைக்கான திட்டமிடல் என்ன என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன், “இந்த டோக்யோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய மக்களின் கனவையும் நிறைவேற்றியிருக்கிறார் நீரஜ் சோப்ரா. இவரின் வெற்றியை இந்திய தேசமே துள்ளிக்குதித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதல்வரின் சார்பாக, தமிழக விளையாட்டுத்துறையின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

image

தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையில் புதிய புரட்சியை தமிழக முதல்வர் ஏற்படுத்த இருக்கிறார். தமிழகத்தில் நான்கு ஒலிம்பிக் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தரும் தொலைநோக்குத்திட்டத்துடன் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். தடகள போட்டிகள், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் தமிழ்நாடு சிறப்பு கவனம் செலுத்தவுள்ளது. ஏனென்றால் தமிழக கிராமங்களில் நிறைய தடகள வீரர்கள் உள்ளனர், அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கவுள்ளோம். இந்த ஒலிம்பிக்கில் தமிழகத்திலிருந்து 11 பேர் பங்கேற்றனர். அதில் 5 பேர் தடகள வீரர்கள். இவர்கள் எளிய குடும்பத்தினை சேர்ந்தவர்கள். இதுபோன்ற நூற்றுக்கணக்கான இளம் வீரர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதற்கு தேவையான நிதி மற்றும் பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்யவும் சிறப்பான கவனம் செலுத்தப்படும். தேவைப்பட்டால் தமிழ்நாடு வீரர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். திறமையிருக்கும் வீரர்கள் அரசை அணுக சிறப்பு பிரிவை உருவாக்கவும் தமிழக முதல்வர் திட்டமிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்   

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments