சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 135 ரன் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் சாஹா நிதானமாக ரன்களை சேர்க்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஜேஸன் ராய் (2), வில்லியம்சன் (11), பிரியம் கார்க் (7) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சாஹாவும் 44 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இடையில், அபிஷேக் ஷர்மா 18(13), அப்துல் சமத் 18 (14) அதிரடி காட்டினாலும் நீண்ட நேரம் களத்தில் நிற்காமல் நடையைக் கட்டினர். ஜாஸன் ஹோல்டர் 5 ரன்னில் ஆட்டமிழக்க, இறுதிக்கட்டதில் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார் ரஷித் கான். ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. ரஷித் கான் 17 (13), புவனேஸ்வர் குமார் 2 (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
சென்னை அணி தரப்பில் பிராவோ அற்புதமாக பந்துவீசி 4 ஓவரில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தினார். அதேபோல், ஜோஸ் ஹசல்வுட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டையும் சாய்த்தார். ஜடேஜாவும் 3 ஓவர் வீசி 14 ரன் மட்டும் வழங்கி ஒரு விக்கெட்டையும் எடுத்தார். ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments