
நடப்பு ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

பெங்களூர் அணிக்காக அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் படிக்கல் இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் சிஎஸ்கே வீரர்களின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். அடித்தால் சிக்ஸர், பவுண்டரி என்று விளாசிக் கொண்டே இருந்தனர். ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. பவர் பிளே 6 ஓவரில் 55 ரன்கள் குவித்தனர். அதன் பிறகும் இந்த ஜோடியின் அதிரடி நின்றபாடில்லை. ஒவ்வொரு ஓவரில் சிக்ஸர் அல்லது பவுண்டரி தவறால் இடம்பெற்றது. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 90 ரன்கள் குவித்தது.
முதல் விக்கெட்டிற்கு 111 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கோலி 41 பந்துகளில் 53 ரன்களை எடுத்து 14வது ஓவரில் அவுட்டானார். ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி இருந்தார் அவர். கோலியின் விக்கெட்டை 14-வது ஓவரில் பிராவோ கைப்பற்றினார். இதே சீசனில் கோலி - படிக்கல் இணையர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 178 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து டிவில்லியர்ஸ் களத்திற்கு வந்தார். 200 ரன்களுக்கு மேல் பெங்களூர் அணி எடுக்கும் நோக்கில் அவர் களமிறக்கப்பட்டார். ஆனால், விராட் கோலி ஆட்டமிழந்ததற்கு பின் ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டது.
சிக்ஸர்களாக விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 17-வது ஓவரில் அவரை வெளியேற்றினார் தாக்கூர். பின்னர் மேக்ஸ்வெல் வந்தார். இருந்தும் அதே ஓவரில் நன்கு செட்டாகி விளையாடிக் கொண்டிருந்த படிக்கல் விக்கெட்டை கைப்பற்றினார் தாக்கூர். இதன் மூலம் ஆட்டம் சென்னை அணியின் பக்கமாக திருப்பியது. டிம் டேவிட் விக்கெட்டை 19-வது ஓவரில் கைப்பற்றினார் தீபக் சஹார். கடைசி ஓவரை வீசிய பிராவோ, மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் விக்கெடுகளை தூக்கி இருந்தார்.
கோலி வெளியேறிய பிறகு மொத்தமே 45 ரன்களை தான் பெங்களூர் அணி எடுத்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது பெங்களூர். சென்னை அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் தேவை. எப்படியும் 200 ரன்களை பெங்களூர் அணி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் சிஎஸ்கே அணியினரின் நேர்த்தியான பந்துவீச்சாளும், கேப்டன் தோனியின் அற்புதமான கேப்டன்சியாலும் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
இதையும் படிக்கலாம் : ஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments